திருக்குறள் புதைபொருள்-2
கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறள் புதைபொருள்
[ இரண்டாம் பாகம் ]
முத்தமிழ்க் காவலர், கலைமாமணி,
டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம், டி. லிட்.
பாரி நிலையம்
184. பிராட்வே.சென்னை.600108
முதற் பதிப்பு : நவம்பர், 1974.
இரண்டாம் பதிப்பு : ஜனவரி, 1978.
மூன்றாம் பதிப்பு : ஜனவரி, 1983.
நான்காம் பதிப்பு : டிசம்பர் 1988.
விலை : ரூ. 5-00
※முதற் பாகத்தில் இதுவரை ஏறத்தாழ முப்பதினாயிரம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. அதனைப் படித்து மகிழ்ந்த அன்பர்களும் பிறரும், இதனையும் படித்துப் பயன் பெறுதுவது நல்லது.
மாருதி பிரஸ்,
173, பீட்டர்ஸ் ரோடு,
சென்னை—600 014.
முன்னுரை
திருக்குறள் தமிழகத்தின் செல்வம். அதுவும் தமிழனின் சொந்தச் சொத்து. அது உலகின் ஒப்பற்ற செல்வங்களில் ஒன்றாக இன்றும் திகழ்த்து வருகிறது.
மனிதன் கேட்கக் கடவுள் சொன்னது பகவத்கீதை. கடவுள் கேட்க மனிதன் சொன்னது திருவாசகம். மனிதன் கேட்க மனிதன் சொன்னது திருக்குறள். அதுவும் வாழ்ந்து காட்டிய ஒரு பெருமகனால், வாழ வழிவகுத்துக் காட்டிய ஒரு வழிகாட்டி. இதனால் திறக்குறளை ஒரு வாழ்வு நூல் எனலாம்.
திறக்குறளை ஆழ்ந்த படிப்பதின் முலமே அதன் அரிய கருத்துக்களை அறிந்து மகிழ முடியும். என்னுடைய பல்வேறு தொழில்துறைத் தொல்லைகளுக்கிடையில் பன்னிரண்டு குறள்களை ஆராய்ந்து இதன் முதற்பாகத்தை வெளியிட்டேன். அதைப் படித்து மகிழ்ந்த அன்பர்களின் இடைவிடாத் தூண்டுகோலின் விளைவே இது.
இந்நூலில் பத்துக் குறள்கள் ஆராயப் பெற்றுள்ளன. தனது அருமையான நேரங்களில் சிலவற்றை ஒதுக்கி, இந்நூலினை முழுவதும் படித்துப் பாராட்டி மதிப்புரை வழங்கிய, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, மாண்புமிகு ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் B. Sc., B.L. அவர்களுக்கு என் வணக்கம் உரியதாகட்டும்.
முதற் பாகத்தினைப் படித்து மதிப்புரை வழங்கிய பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களுக்கும், இந்நூலை வெளியிட இடைவிடாது தூண்டிய அன்பர்களுக்கும், இவற்றை நல்ல முறையில் அச்சிட்டு வழங்கிய பாரி நிலையத்தினருக்கும் என் நன்றி.
திருச்சிராப்பள்ளி, தங்களன்பிற்குரிய,
கி. ஆ. பெ. விசுவநாதம்
5-11-74
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மாண்புமிகு,
ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் B.Sc., B.L. அவர்களின்
மதிப்புரை
அரை நூற்றாண்டு காலமாக வள்ளுவர் நெறியைத் தமிழகமெங்கும் பரப்பி வந்தவர் இந்நூலாசிரியர். ஆசிரியருடைய குறள் விளக்கப் பேச்சுக்களை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டுப் பயனடைந்திருக்கிறார்கள்.
கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுடைய பேச்சுக்களின் கவர்ச்சிக்குக் காரணமாக இருப்பது அவர்களுடைய உருவப் பொலிவு மாத்திரமல்ல. உள்ளத் தெளிவும், ஆர்வத்தோடு பொங்கி எழும் கம்பீரத் தமிழும். அவர்களுடைய பேச்சுக்குக் கவர்ச்சியை யூட்டுகின்றன.
ஒவ்வொரு குறளையும் உண்மையோடும் உணர்ச்சியோடும் ஒட்டி நின்று அனுபவித்து, வாழ்க்கை என்ற உரைகல்லில் குறளை உரைத்துப் பார்த்து, அதன் உட்பொருளை உணர்ந்தவர் கி. ஆ. பெ. வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட வளமான அனுபவமும் வள்ளுவர் இதயத்தை புரிந்து கொள்ளுவதற்குத் துணையாக இருந்திருக்கிறது.
மேலும், தாம் வள்ளுவரிடம் கற்ற உண்மைகளை விதம் விதமான உதாரணங்களைக்கொண்டு விளக்கும் வல்லமை பெற்றவர் இவ்வாசிரியர். ஐம்பது ஆண்டுகளாகத் திறக்குறளை விளக்கி விளக்கிப்பெற்ற தெளிவெல்லாம், இந்நூலின் முழுக்க முழுக்க இறங்கியிருக்கிறது.
உதாரணமாக,
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
என்ற குறளில் வரும் “நகும்” என்ற சொல்லுக்கு ஆசிரியர் தரும் விளக்கவுரை தனிச் சிறப்பு வாய்ந்தது. “அது வெற்றிச் சிரிப்பா? ஏளனச் சிரிப்பா? மனக்குறைச் சிரிப்பா? துன்பச் சிரிப்பா? அல்லது பயங்கரச் சிரிப்பா?” என்று பல கேள்விகள் கேட்டு, கேள்விகளுக்கு ஆசிரியர் கூறும் விடைகள் மிகச் சுவையுடையவை. இப்பேர்ப்பட்ட உத்திகளைக் கையாண்ட காரணத்தால் கி. ஆ. பெ.யின் தமிழ் இயல்பாகவும் உயிர்த்துடிப்போடும் பேசுகிறது.
வள்ளுவருடைய ஆழங்காண முடியாத இதயத்திலிருந்து தோண்டித் தோண்டியெடுத்த உண்மைகளை விளக்கும் இந்நூலுக்கு, “திருக்குறள் புதைபொருள்” என்ற தலைப்பு முற்றிலும் பொருத்தமானது.
ஆழ்ந்த அறிவும், கலைப்பாங்கும், நகைச்சுவையும் விரவிக் கலந்த இந்நூலைப் படித்து, வியப்பும், விம்மிதமும் அடைந்தேன். ஆசிரியர் இன்னும் பல்லாண்டு இப் புதைபொருள் ஆராய்ச்சியை நடத்தி, அதன் பலனைத் தமிழர்களுக்கு நல்குவாராக.
சென்னை
ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்
2-11-74
முதற்பாகத்தின் மதிப்புரை
அண்ணாமலைப் பல்கலைக்கழக,
தமிழ்ப்பெரும் பேராசிரியர்,
உயர்திரு. டாக்டர் சிதம்பரநாதன் செட்டியார்
M. A., Ph.D அவர்கள்.
திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்தவர். அதன் நுண்பொருள்களை ஆய்ந்து பிறர்க்கு எடுத்து வழங்கும் நாநலம் படைத்தவர். “எண்பொருளவாகச் செலச் சொல்லித் தான் பிறர் வாய் நுண்பொருள் காண் பதறிவு” என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் அறிவு நிரம்பியவர்.
அவரால் இயற்றப்பட்ட இந்நூல் புலவர்க்கும் பொதுமக்கட்கும் இனியதோர் விருந்தாகும். திருக்குறட் பாக்களில் வரும் சொற்களை அலசியலசி ஆராய்ச்சி செய்து கடைந்தெடுத்த நுண்பொருள்களை, இனிய, எளிய, செந்தமிழ் நடையில் இந்நூலினுள் அவர் தந்திருப்பதை வரவேற்கின்றேன். “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத்தறித்த குறள்” என்றதன் உண்மையானது இச்சிறிய பெருநூலால் நன்கு விளங்குகிறது.
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற இடத்தில் வரும் ”உயிரினும்' என்ற சொல்லுக்கும், “பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு” என்ற இடத்து வரும் “பிறர்” என்ற சொல்லுக்கும், “உடுக்கை யிழந்தவன் கைபோல” என்ற இடத்து வரும் “இழந்தவன்” என்ற சொல்லுக்கும்
திரு. விசுவநாதன் தந்திருக்கும் விளக்கங்கள் பாராட்டத்தக்கவை.
‘பதசாரம் எழுதுதலில் பரிமேலழகர் அழகர்’ என்பார்கள். ஆயினும், இந்நூலில் காட்டப்படும் புதைபொருள் விளக்கத்தை உற்று நோக்குவார்க்கு இவ்வாசிரியர் பரிமேலழகரை விஞ்சிவிட்டார் என்பது புலப்படும்.
திருக்குறட் சுரங்கத்துட் புகுந்து, பன்னிரண்டு பாளங்களை எடுத்து வந்து. அவற்றின் சிந்தைக்கினிய அழகினைச் செவ்லிதின் எடுத்துக் காட்டியுள்ள திரு. விசுவநாதனாருக்குத் தமிழுலகு கடப்பாடுடையது. அவர் மென்மேலும் இவைபோன்ற நுண்பொருள்களைத் தோண்டி எடுத்துத் தருதல் வேண்டுமென விழைகின்றேன். பலரும் இதனைப் படித்துப் பயன்பெறுவது நல்லது.
தங்கள்,
அ. சிதம்பரநாதன்.
பொருளடக்கம்
1. கூத்தாட்டு அவைக்குழாம்
2. நகச்சொல்லி நட்பாடல்
3. அடக்கமுடைமை
4. நினைக்கப்படும்
5. சுற்றம் கெடும்
6. கொன்றதுபோலும் நிரப்பு
7. அல்லவை தேய
8. மெய்வேல் பறியா நகும்
9. எய்தாப் பழி
10. நோய் செய்தார் மேல
1. கூத்தாட்டு அவைக்குழாம்
"கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று."
என்பது திருக்குறளில் ஒரு குறள். “செல்வம் நிலையாது. அது அழிந்துவிடும்” என்பது இதன் கருத்து!
இது நிலையாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று. ‘இவ்வுலகில் தோன்றும் பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியன’ என்பதே நிலையாமை என்பதின் பொருள்.
“நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்கக்கூடியவை என எண்ணுவது அறிவுடையவர்க்கு இழிவு” என்று முதற்குறளில் கூறிய வள்ளுவர், அடுத்து “நிலைத்து நில்லாதவைகளில் செல்வமும் ஒன்று” என்று இக்குறளில் கூறுகிறார்.
“குறைந்த செல்வம் ஒருக்கால் அழியலாம்; நிறைந்த செல்வம் எப்படி அழியும்” என்று நினைப்பவரை நோக்கியே எச்சரிக்கை செய்கிறது இக்குறள். “அது எவ்வளவு பெரிய செல்வமாயினும் அழிந்து வீடும்” என்பதை இக்குறளில் உள்ள ‘பெருஞ்செல்வம்’ என்பது மெய்ப்பிக்கும்,
‘ஒரு பெருஞ்செல்வம் எப்படி இருக்கும்?’ என்ற கேள்விக்கு, வள்ளுவர், ‘நாடகக் கொட்டகைகளில் மக்கள் திரண்டு வந்திருப்பது போல’ என்று விடை கூறியிருப்பது பெரிதும் வியக்கக்கூடியதாகும்.
எங்கெங்கோ மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியிருக்க அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நடப்பதைக் கண்டு மகிழக் கூடியிருக்கும் கலைஞர்களின் கூட்டத்தை மட்டும் பெருஞ்செல்வத்திற்கு உவமையாகக் காட்டியிருப்பது அவரது கலையுள்ளத்தையே நமக்குக் காட்டுவதாக இருக்கிறது.
எப்படி நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து பின் பெருங்கூட்டமாகக் காணப்படுகிறார்களோ, அப்படியே ஒருவனுக்குச் செல்வமும் சிறிது சிறிதாக வந்து, பின் பெருஞ்செல்வமாகத் திரண்டு காட்சியளிக்கும் என்ற கருத்தையும் இக்குறளிற் கண்டு மகிழுங்கள்.
நாடகத்திற்கு வரும்போது தனித்தனியாக வந்த மக்கள், நாடகம் முடிந்தபிறகு ஒன்று சேர்ந்து ஒரேயடியாய்ப் போய்விடுவதைப் போல, வருங்காலத்தில் கொஞ்சங் கொஞ்சமாய் வந்த செல்வம், போகுங்காலத்தில் ஒரேயடியாய்ப் போய்விடும் என்ற உண்மையை, இக்குறள் வெகு அருமையாக விளக்கிக்கொண்டிருக்கிறது.
நாடகக் கொட்டகைக்கு மக்கள் வரும்போது, ஒரு வழியில் மட்டும் வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடுவதுபோல, செல்வமும் ஒரு வழியில் வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடும் என்ற கருத்தை இக்குறள் மிகவும் அழுத்தமாகவே கூறிக் கொண்டிருக்கிறது.
‘செல்வம் வரும்போது மகிழ்வும், போகும்போது சோர்வும் ஒருவனுக்கு எப்படி உண்டாகும்?’ என்பதைக் காட்ட, நாடகத்தைக் காணவரும் ம க் க ளி ட ம் வரும்போது காணப்படும் மகிழ்வையும், போகும்போது காணப்படும் சோர்வையும் உவமையாகக் காட்டியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்படுகிறது.
“நாடகத்தை முன்வைத்து மக்கள் கூடுவதும், பிறகு கலைவதும்போல, ஒருவனது செயலை முன்வைத்துச் செல்வம் சேர்வதும் பிறகு அழிவதும் ஏற்படும்” என்ற கருத்தும் இக்குறளில் புதை பொருளாகப் புதைந்து காணப்படுகிறது.
இக்குறளில் உள்ள ‘போக்கும்’ என்ற சொல்லில் ‘ம்’ ஒன்றிருந்து, ‘போவதும் அப்படியே!’ என்று கூறுவதால், வருவதும் அப்படியே, இருப்பதும் அப்படியே, என்றும் கூறாமற் கூறுவதைக் கண்டு மகிழுங்கள்.
நாடகம் காணவரும்போது மகிழ்வு; காணும்போது இன்பம்; கலையும்போது சோர்வு உண்டாவதுபோல, ஒருவனுக்குச் செல்வம் வரும்போது மகிழ்வும், துய்க்கும் போது இன்பமும், தொலையும்போது துன்பமும் ஏற்படும் என்ற இக்கருத்தும் இக்குறளில் இல்லாம வில்லை.
ஒரே கூத்தாட்டு அவையை, மக்கள் நிறைந்து காணப்படும்போது நிறைந்த செல்வத்திற்கும், குறைந்து காணப்படும்போது குறைந்த செல்வத்திற்கும், கலைந்து போய்விட்ட பிறகு வறுமையின் இருப்பிடத்திற்கும் உவமை காட்டுவது எண்ணி எண்ணி வியக்கக்கூடியதாகும்.
கூத்தாட்டு அவைக்குழாம் என்பது ஒன்றல்ல; இரண்டு. ஒன்று கூத்தாட்டு அவையில் கூடுகின்ற குழாம்; மற்றொன்று கூத்தாட்டு அவையில் நடிக்கின்ற குழாம் ஆகவே நடிகர்களின் நடை, உடை, நடிப்பு, வேடம், கதை, காட்சி அனைத்தும் பொய்; நிலையற்றவை. நாடகம் முடிந்ததும், அவை அனைத்தும் அழிந்து ஒழிந்து ஒன்றுமே யில்லாமற் போய்விடும். அது போலவே உனது செல்வத்தின் தோற்றமும் இருப்பும் அழிவும் என்பதை வற்புறுத்தவே இக்குறள் தோன்றியிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.
செல்வம் வருகின்ற வேகத்தைவிட அது அழிகின்ற வேகம் அதிகமாக இருக்கும் என்பது கலைஞர்களைப் பொறுத்தவரையில் 100க்கு 95 பங்கு உண்மையாக இருக்கும் என்பதை எண்ணியே, வள்ளுவர் கூத்தாட்டு அவையை, குழுவை, உவமையாகக் கொண்டாரோ? என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.
செல்வம் நிலையாது! அது என்றும் உன்னிடம் நிலைத்துநிற்கும் என்றெண்ணி ஏமாற்றம் அடையாதே. கூத்து நடைபெறும் அவையில் கூடிக்கலையும் குழுவினரைப்போல ஒருநாள் அது உன்னைவிட்டு ஒழிந்து போய்விடும். ஆதலின் அறஞ்செய். அது நல்லது! என்பது இக்குறளின் திரண்ட கருத்து.
சிலப்பதிகாரத்தின் காலத்திற்கு முன்னுள்ள வள்ளுவர் காலத்திலும் நாடகக்கலை இருந்து வந்திருக்கிறது. நாடகங்கள் பல வள்ளுவர் காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. நாடகம் பார்ப்பதில் வள்ளுவருக்கும் விருப்பம் உண்டு. நாடகத்தையும் கண்டு களித்திருக்கிறார். அதுவும் எல்லோருக்கும் முன்னே சென்று அமர்ந்து பார்த்திருக்கின்றார். முன்புறத்தில் மட்டுமல்ல; பின் புறத்திலும் திரும்பிப் பார்த்து கூட்டத்தின் பெருக்கைக் கணக்கிட்டு மகிழ்ந்திருக்கிறார். நாடகம் முடிந்தபிறகு நெருக்கடியில் அகப்படாமல் இருந்து கடைசியாகவே வெளிவந்திருக்கிறார். நாடக அவையை. நாடகக் கலையை, நாடகக் கலைஞர்களைச் செல்வமாகக் கருதியிருக்கிறார். வெறுஞ்செல்வமாக அல்ல; பெருஞ்செல்வமாகவே கருதியிருக்கின்றார் என்ற இதுவும், இது போன்ற பிறவும், இக்குறளால் அறிந்து மகிழலாம்.
குறளைப் படியுங்கள், விரும்பிப் படியுங்கள். மேற்போக்காக அல்ல; கருத்துான்றிப் படியுங்கள். எழுதுவதற்காக அல்ல, பேசுவதற்காக அல்ல, நடப்பதற்காக என்று படியுங்கள். அப்படிப் படித்தால் அது உங்கள் வாழ்வை வளமாக்கும்.
வாழட்டும் குறள் நெறி!
2. நகச்சொல்லி நட்பாடல்
"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “புறங் கூறாமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.
வெஃகாமையைப் பற்றிக் கூறியதன் பின்னும், பயனில் சொல்லாமையைப் பற்றிக் கூறுவதன் முன்னும், வள்ளுவர் புறங்கூறாமையைப் பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும். பிறர் பொருளை அடைய ஆசைப்படுதல் புறங்கூறுதலில் வந்து முடியும் என்பதும், புறங்கூறுகின்ற ஒருவன் பயனற்ற சொற்களைச் சொல்ல நேரிட்டுவிடும் என்பதும், இவ்வதிகார வைப்புமுறையால் பெறப்படும்.
“புறங்கூறுவது தவறு, அது சுற்றத்தார்களைப் பிரித்து விடும். இனியவைகளைக் கூறி அவரை நட்புக் கொள்ள அறியாதவரே புறங்கூறுவர்” என்பது இதன் பொருள்.
பொய்கூறல், புறங்கூறல், கடுஞ்சொற்கூறல், பயனில கூறல் ஆகிய நான்கும் மக்கள் நாவினாற் செய்யும் தவறுகள். இதில் புறங்கூறுதல் பொய்யை அடுத்துநின்று, “துணைத் தலைமைப்பதவியை” வகித்து நிற்கிறது. புறங் கூறலைக் கோள்மூட்டல், மூட்டல் எனவுங் கூறுவதுண்டு.
புறம் என்பது “ஒன்றிலிருந்து வேறானது” என்றாகும். கூறப்படுபவனும் புறம், கூறுபவனும் புறம், கேட்பவனும் புறம், இடமும் புறம், செய்தியும் புறம் ஆகும். ஆதலின் இதுபற்றிக் கூறுதல் “புறங்கூறல்” என வந்தது போலும்.
“பக” என்பது இரண்டெழுத்துள்ள ஒரு சொல். இச்சொல்லை ‘பகு - அ’ எனப் பிரித்து பகுக்க; பிரிக்க, நீங்கு மாற்றால் எனச் சுற்றிவளைத்துப் பொருள் காண்பதை விட “வெறுக்க” எனப் பொருள்காண்பது நல்லது எனத் தோன்றுகிறது. அவ்வாறாயின், வெறுக்கக் கூறுதல் என்பதே புறங்கூறல் என்றும், புறங்கூறல் என்பதே வெறுக்கக் கூறுதல் என்றும் அமையும்.
புறங்கூறுதலை புறஞ்சென்று கூறுதல் என்பர். அதுவும் நல்லவைகளையல்ல; தீயவைகளை. அதையும் அவரிடமல்ல; பிறரிடம் என்பர். இதனால் புறங்கூறுதல் என்பது ஒருவரைப் பற்றித் தவறான கருத்துக்களை அவரில்லாதபோது பிறரிடம் கூறிக்கொண்டிருப்பதை என நன்கு விளங்குகிறது. இது வெறுக்கத்தக்கது என்பது வள்ளுவரது கருத்து. இதனை இக்குறளிலுள்ள “பகச்சொல்லி” என்பது நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
புறங்கூறும் செயலானது தொடக்கத்தில் புறங்கூறப் படுபவனை வெறுக்கச் செய்யும். அடுத்து சொல்பவனை வெறுக்கச் செய்யும். எனவே புறஞ்சொல்லல் என்பது வெறுக்கச் சொல்லல் என்றாகிறது. இதனையே “பகச்சொல்லி” என்பதும் சொல்லுகிறது போலும்.
பகச்சொல்லும் கொடுமை பண்பற்றவரது செயல். அது மக்கட் சமுதாயத்திற்கே வேண்டாத ஒன்று. அது தன்னையுடையவனை ஒரு இழிந்த மகனாகக் காட்டி, சுற்றத்தினரையும் வெறுக்குமாறு செய்துவிடும். ஆகவே புறங்கூறும் பழக்கமுடைய ஒருவன் சுற்றத்தார்களிடையே வாழத் தகுதியற்றவன் என்பது இக்குறளின் கருத்து. இவ்வுண்மையை, இக்குறளிலுள்ள “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்” என்ற சொற்றொடரால் நன்கறியலாம்.
கேளிர்ப் பிரிப்பர் என்பது கேளிரைப் பிரிப்பர் எனறாகும். இதனால் சுற்றத்தார்களைப் பிரிந்து வாழும் வாழ்வு எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், அது ஒரு சிறந்த வாழ்வாக இராது என்பதையும், அத்தகைய ஒரு சிறந்த வாழ்வைப் புறங்கூறும் ஒருவன் அடைய முடியாது என்பதையும் இக்குறள் கூறி, நம்மை எச்சரிக்கை செய்வதாக எண்ணவேண்டியிருக்கிறது.
கேளிர்ப் பிரிப்பர் என்பது கேளிரையும் பிரிப்பர் என்றுமாகும். இதனால் புறங்கூறும்கொடுஞ்செயலானது தன்மீது பற்றுக்கொண்டுள்ள உற்றார் உறவினரையும் பிரித்து வைத்துவிடும் என்றாகிறது. “சுற்றத்தார்களையும் பிரித்து வைத்துவிடும்” என்பதனால், பிறரை என்னென்ன செய்யும் என்பதையும் இக்குறள் கூறாமற் கூறியிருப்பதாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.
உற்றார் உறவினர்களிடம் இருந்து பிரிவதால் தமக்கு ஒரு கேடுமில்லை என எவரும் எண்ணிவிட முடியாது. ஏனெனில், சுற்றத்தார்களிடமிருந்து ஒருவன் எவ்வளவு தூரம் பிரிந்து செல்லுகிறானோ, அந்த அளவிற்கு அவன் வேண்டாதவர்களை நெருங்கிவிடுகிறான். எனவே, “சுற்றத்தார்களிடமிருந்து பிரியாயிலிருக்க வேண்டும் என்பதற்காகவாவது புறங்கூறாதே” எனப் புறங்கூறும் மக்களின் நலன்களைக் கருதியும், இக்குறள் அறம் கூறும் தன்மையில் அமைந்திருப்பது வியக்கக்கூடியதாகும்.
ஒத்த பண்பும், பணியும், நட்பும் உடைய சுற்றத்தார் இருவருக்கிடையில், ஒருவன் சென்று புறங்கூறுவானாயின், அது அவர்களில் ஒருவரை ஒருவர் பகைக்கச் செய்து, அவர்களிருவரையும் பிரித்து வைத்துவிடும். ஆதலின் ‘கேளிர்ப் பிரிப்பர்’ என்பதை, “கேளிரிற் பிரிப்பர்” என்றும் கொள்ளலாம்போலத் தெரிகிறது.
வீரமற்றோர், ஈரமற்றோர், பொய்யர், வஞ்சகர், பொறாமை கொண்டோர் ஆகியவரே புறங்கூறித் திரிவர். ஆதலின், அத்தகைய மக்களை அவர்களது சுற்றத்தார் தங்களில் ஒருவராக ஏற்க அஞ்சி வெறுத்தொதுக்கிப் பிரித்துவிடுவர். இதனால் புறங்கூறு வோரைப் ‘கேளிரும் பிரிப்பர்’ எனவும் கொள்ள வேண்டியிருக்கிறது.
புறங்கூறுகின்ற ஒருவனை அவனது சுற்றத்தாரும் பிரித்துவிடுவர் என்பதிலிருந்து, புறங்கூறுவார்க்குத் துணையாவார் இவ்வுலகில் எவருமில்லை என இக்குறள் அறுதியிட்டுக் கூறுவதாகவும் தெரியவருகிறது.
உறவினர்களுடைய குற்றங்களைக் கூறுவதே இத்தகைய விளைவுகளை உண்டாக்கிவிடுமானால், பிறருடைய, அதிலும் பகைவர்களுடைய குற்றங்களைக் கூறுவது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதையும், இக்குறள் நம்மைச் சிந்தித்துப் பார்க்கும் படி தூண்டிக்கொண்டிருக்கிறது.
உள்ள குறைகளைப்பற்றிக் கூறுவதனாலேயே புறங்கூறும் ஒருவனுக்கு இத்தகைய தீமைகள் விளையுமானால், இல்லாத குற்றங்களை ஒருவர்மீது ஏற்றிக் கூறுவதன் மூலம் என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பதையும் இக்குறள் நம்மை எண்ணிப்பார்க்கும்படி செய்கிறது.
புறங்கூறும் மக்களை வள்ளுவர் தமக்கு அறிமுகம் செய்துவைக்கும் சொல்லே ஒரு நல்ல சொல். அது கொடியர், தீயர், பொய்யர், வஞ்சகர், பொறாமையாளர் என்பதல்ல; அது "அறியாதவர்" என்பதே, இதனை இக்குறளின் ஈற்றிலுள்ள "தேற்றாதவர்" என்ற சொல்லால் அறியலாம். இது அவரது பண்பட்ட உள்ளத்தையே நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.
அறியாதவரைக் காட்டுவதிலும், "நகச்சொல்லி நட்பாடலை அறியாதவர்" என விளக்கத்தோடு காட்டுகிறார். நட்பாடல் என்பது நட்புக்கொள்ளுதல் என்றும், நகச்சொல்லுதல் என்பது பிறர் மகிழும்படி சொல்லுதல் என்றும் ஆகும். எனவே, புறங்கூறும் கொடுமையானது பிறரை நட்புக்கொள்ளத் தெரியாதவரின் செயல் என இக்குறள் கூறுவது ஒரு பெரிய உண்மையை வெளியிடுவதாகவும் காணப்படுகிறது.
"தேற்றாதவர்" என்ற சொல்லின் பொருள், ஒன்றுமே தெரியாதவர், எதையுமே அறியாதவர் என்பதல்ல; "தெரிந்தும் அதைச் செய்ய அறியாதவர்" என்றே ஆகும்.
பிறர் மகிழும்படி இனிய சொற்களைச் சொல்லி நட்புக்கொள்ளத் தெரியாதவர்களே, பிறர் வெறுக்கும் படி புறங்கூறிச் சுற்றத்தார்களையும் பகைத்துக் கொள்வர் என்பதே இக்குறள் முழுவதும் பரவி நிற்கும் கருத்தாகும்.
பகச்சொல்வது கேளிரையும் பிரிக்கும் என்று இக்குறள் கூறுவதால் நகச்சொல்வது பகைவரையும் நட்பாக்கும் என்பது கூறாமலேயே விளங்கும்.
நகச்சொல்லும் பண்புடையாளர் பகச்சொல்லத் தெரியாதவர். பகச்சொல்லும் பழக்கம் உடையவர் நகச்சொல்லத் தெரியாதவர். ஆகவே இக்குறள் இந்தத் தெரியாதவரையும் தெளியாதவரையும், அவரது சொல்லோடும், செயலோடும், விளைவோடும் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
புறத்தில் துாற்றுவர் என்பதால், “நேரிற் புகழ்வர்” என்றாகிறது. இதனை வள்ளுவர் மற்றொரு குறளில் “புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தல்” என்கிறார். அத்தகைய மக்கள் வாழ்வதைவிட மடிவது நல்லது என்பதும் அவரது கருத்து.
“புறங்கூறுதல் என்பது மக்கட்கு வேண்டாத ஒன்று. புறங்கூறி வாழ்கின்ற வாழ்வு நல்வாழ்வு ஆகாது. அதன் விளைவு மிகக் கொடியது! அதனைச் செய்பவர் தெளிவற்றவர்! அதிலும் நல்லவைகளைக் கூறி நட்புக் கொள்ளத் தெரியாதவர்” என்பதே இக்குறளின் முடிவு.
படியுங்கள் குறளை மறுபடியும்...
"பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்."
எப்படி இக் குறள்? இந்த குறளே நமக்கு இவ்வளவு அறிவுரைகளை வழங்குமானால், மற்ற ஆயிரத்து முன்னுாற்று இருபத்தொன்பது குறள்களும் எவ்வளவு அறிவுரைகளை வழங்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
எடுங்கள் கு ற ளை ! படியுங்கள் நன்றாக! திருக்குறளைப் படிப்பதும் கட்டுரைகள் எழுத, சொற்பொழிவுகள் நிகழ்த்த, நூல்கள் வெளியிட, புலவன் ஆக, பொருள் திரட்ட, மேற்கோள்கள் காட்ட என எண்ணிப் படிப்பது பயனற்றதாகும். படித்து அறிந்து, அதன்படி நடந்து ஒழுகவேண்டும் என எண்ணிப் படிப்பதே பயனுள்ளதாகும்.
புறங்கூறுதல் என்பது ஒரு கொடிய நோய். அதை எளிதிற் போக்க இயலாது. அதை ஒழிக்கும் மருந்து மருத்துவ நூல்கள் எதிலுமேயில்லை. திருக்குறள் ஒன்றே அதனை ஒழிக்கும் ஒரே மருந்தைக் கூறுகிறது. அது எது தெரியுமோ? “எவரிடமும் இனியதைக் கூறு” என்பதே! செய்வீர்களா?
வாழட்டும் தமிழ்மொழி!
வளரட்டும் குறள் நெறி!!
3. அடக்கமுடைமை
"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினுஉங் கில்லை உயிர்க்கு."
என்பது திருக்குறளில் அடக்கமுடைமை என்ற தலைப்பில் இரண்டாவதாக வந்துள்ள குறள்.
நாமெல்லாம் பொன்னையும் பொருளையும் உடைமைகள் எனக் கருதி வருகிறோம். வள்ளுவரோ இவையல்லாத உடைமைகளைப் பற்றிக் கூறுகிறார். அவைகளையும் அதிகாரத்தின் தலைப்புகளாக அமைத்திருக்கிறார். அவை பத்து. அவற்றை வரிசையாக வைத்து முறைப்படுத்தினால் முதலில் வந்து நிற்பது “அடக்க முடைமையே” அதைத் தொடர்ந்து வருகிற மற்ற உடைமைகள் அருளுடைமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை நாணமுடைமை, பண்புடைமை, பொறையுடைமை என்பன.
ஆற்றலுள்ளவர் அடங்குவதற்கே “அடக்கம்” என்று பெயர். ஆற்றலற்றவரின் அடக்கம் ‘அடக்கம்’ என்ற பெயரைப் பெறாது. “கற்றுணர்ந்து அடங்கல்” “ஆன்றவிந்து அடங்கல்” என்ற சொற்களே இதனை மெய்ப்பிக்கும்.
இத்தகைய அடக்கமும் பலவகையாம். அவற்றுள் தலைமை வகிப்பன மூன்று. அவை மனஅடக்கம், நாவடக்கம், உடலடக்கம் என்பன. இவை மூன்றும் தீய எண்ணங்களை எண்ணாமை, தீய சொற்களைச் சொல்லாமை, தீய செயல்களைச் செய்யாமை என்றாகும்.
அடக்கம் இன்பத்தையும், அடங்காமை துன்பத்தையும் தருமாதலின் வாழ்வைச் செம்மைப்படுத்தி உயர்த்த இன்றியமையாத ஒன்று “அடக்கம்” என்பதையே, இக் குறள் வற்புறுத்துகிறது.
எதையும், எதிலும் அடக்க வேண்டுமானாலும், அது ஒரு பொருளாக இருந்தாகவேண்டும். இன்றேல், அது அடங்கவும் செய்யாது; அடக்கவும் முடியாது. அடங்குதல் என்றுமாகாது. ஆகவே, அடக்கம் தானாகவே ஒரு பொருளாகிவிடுகிறது. அதை எண்ணியே அடக்கத்தை ஒரு பொருளாக மதிக்கும்படி வள்ளுவர் இக்குளிற் கூறுகிறார். இது எண்ணி எண்ணி மகிழக்கூடிய ஒன்று.
பயிரும், பொருளும் பாதுகாக்கத் தக்கவை. இன்றேல் இவை இரண்டும் அழிந்துபடும். அடக்கம் ஒரு பொருளாக ஆகும்பொழுது, அதைப் பாதுகாத்தாக வேண்டும் என்பதும் பெறப்படும். அதனாலேயே, “காக்க பொருளா அடக்கத்தை” என்று இக்குறள் நமக்குக் கடுங் கட்டளை யிடுகிறது.
காக்காவிடல் தீமை விளையும் என்பது மட்டுமல்ல, காப்பதால் நன்மை விளையும் என்பதும் வள்ளுவரது கருத்து. இதை இக்குறளிலுள்ள “ஆக்கம்” என்ற சொல் விளக்கிக்கொண்டிருக்கிறது.
அடக்கமான வாழ்வினாற் பெறுகின்ற ஆக்கம் மிக உயர்ந்த ஆக்கமெனவும், அதைவிடச் சிறந்த ஆக்கம் வேறில்லையெனவும், வள்ளுவர் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை, "ஆக்கம் அதனினூஉங் கில்லை” என்பதால் நன்கறியலாம்.
“உயிர்” என்பது பொதுவாக அனைத்துயிரையும் குறிக்கும். எனினும், அறிந்து அடங்கிப் பயன்பெறுவது மக்களே ஆதலின், இது மக்கள் உயிரை மட்டுமே குறிக்க வந்ததாகும்.
ஆகவே, மக்களாய்ப் பிறந்தோரனைவரும் தங்களுக்குப் பெரும் பயனைத் தருகின்ற அடக்கத்தை ஒரு உயர்ந்த பொருளாகக் கருதி, நன்கு பாதுகாத்தாக வேண்டும் என்பது இக்குறள் கூறும் முடிவு.
நல்ல சொற்கள் பலவற்றோடு ஒரு தீச்சொல் கலந்து வருமாயின், அனைத்துமே தீய சொற்களாகிவிடும். தீயினாற் சுட்ட புண்கள் விரைவில் ஆறிவிடுவதைப் போல, நாவினாற் சுட்ட புண்கள் ஆறிவிடுவதில்லை. ஆகவே எதை அடக்கமுடியாவிடினும் நாவை அடக்கியே ஆகவேண்டும். இன்றேல் வாழ்வில் இழுக்குப்படும். மனஅடக்கமும், நாவடக்கமும் கொண்டு வாழ்கின்ற வாழ்வு மிகச் சிறிய வாழ்வாக இருப்பினும், அது மலையினும் உயர்ந்து காணப்படும் பெரு வாழ்வாக அமையும். ஆகவே, தம்பி! அடக்கம் என்னும் அருஞ்செல்வத்தை அடைந்து, அதை ஒரு பொருளாகக் கருதிப் போற்றி பாதுகாத்து வா; அது உன் வாழ்வின் தரத்தையே உயர்த்திவிடும்.
வாழட்டும் தமிழ்ப் பண்பு!
வளரட்டும் குறள் நெறி!
4. நினைக்கப்படும்
"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது ‘அழுக்காறாமை’ என்ற தலைப்பில் வந்த ஒன்று. அழுக்காறாமை என்பது ‘பொறாமை கொள்ளாமை’ என்பதாகும்.
அழுக்கு ஆறு என்பது கலங்கிய வழி, கெட்ட வழி, தீ நெறி, பொய், பொறாமை என்ற பொருள்களைப் பெற்று, நல்ல ஆறு என்பதன் எதிர்மறையாக நிற்பது.
முன்னே பொறையுடைமை என்ற தலைப்பில் பொறுமையின் பெருமையைக் கூறி, பின்னே வெஃகாமை என்ற தலைப்பில் பிறர் பொருளைத் தவறான வழியில் அடையக் கருதும் இழிநிலையைக் கூறி, இடையில் இத் தலைப்பில் அழுக்காற்றில் வாழ்கின்ற ஆற்றாமை என்னும் பொறாமையின் இழிநிலையை வள்ளுவர் எடுத்து இயம்புவது பெரிதும் நயமுடையதாகும்.
இக் குறளிலுள்ள அவ்விய, செவ்விய என்ற இரு சொற்களும் அடைமொழிகள். அவ்விய நெஞ்சம் என்பதனால், செவ்விய நெஞ்சம் என்பதும் கூறாமற் கூறியதாகக் கொள்ளப்படும்.
அவ்விய நெஞ்சத்தான் என்பவன் பொறாமை, கொண்ட உள்ளத்தினன் மட்டும் அல்ல, கோணிய நெஞ்சத்தையும் உடையவன் என்பதும்; செவ்விய நெஞ்சத்தான் என்பவன் நேர்மையான உள்ளமுடை யவன் மட்டும் அல்ல, நிமிர்ந்த நெஞ்சையும் உடையவன் என்பதும் பெறப்படும். இதிலிருந்து, பொறாமை கொண் டவனுடையவும் கொள்ளாதவனுடையவும் நெஞ்சு உறுப்புக்களே அவர்களைக் காட்டிவிடுமென்பது வள்ளுவர் கருத்தெனத் தெரிகிறது.
அவ்விய செஞ்சத்தான் என்பவன் வளைந்த நெஞ்சினன், கோணல் நெஞ்சினன், அழுக்காற்றில் மூழ்குபவன். மனக்கோட்ட முள்ளவன், தீ நெறியில் நடப்பவன் என்றுமாவான்.
செவ்விய நெஞ்சத்தான் என்பவன் நிமிர்ந்த நெஞ்சினன், பரந்த மார்பினன், நல்லாற்றில் மூழ்குபவன். நேர்மையான உள்ளத்தினன், நல்வழி நடப்பவன் என்று மாவான்.
ஆக்கம் என்பது ஆகுதல், பெருகுதல், ஊக்கம், நிறைவு. மகிழ்ச்சி, எழுச்சி, செல்வம் எனப் பொருள் தரும். கேடு என்பது அழிவு, தேய்வு, சோர்வு, குறைவு, துன்பம், வீழ்ச்சி, வறுமை எனப் பொருள்படும்.
நினைக்கப்படும் என்பது, இருசீர் கொண்டு முடியும் ஒரு சொற்றொடர். இதன் பொருள் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று என்பது. இது இக்குறளிலிருந்து நினைத்துப் பார், ஆராய்ந்து உணர் எனக்கூறி, நம்மையெல்லாம் மேன்மேலும் சிந்திக்கத் தூண்டிக் கொண்டிருக்கின்றது.
என்பர், செய்வர், செய்யார், செயத்தக்க, கொள்ளற்க, வேண்டற்க, உண்டு, இல்லை, நன்று, அன்று, அரிது, பெரிது, சிறிது, வறிது, நல்லது, தீது என்றே முடிவு கட்டிக் கூறிவந்த வள்ளுவர், இக்குறளில் மட்டும் ஆக்கமும் கேடும் பற்றி எதுவுங் கூறாமல், நம்மையே நினைத்துப் பார்க்கும்படி விட்டுவிட்டது எதன் பொருட்டு? நினைத்தீர்களா? நினைத்துப் பாருங்கள். எந்தெந்த வகையில்தான் நினைப்பது?
அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்விய நெஞ்சத்தானுக்கு கேடும் வருமா? எப்படி வரும்? சிந்தித்துப் பார்!
அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்வியானுக்குக் கேடும் வாராதே! எவ்விதம் வரும்? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு ஆக்கமும், செவ்வியனுக்குக் கேடும் ஏன் வந்தது? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கம் செவ்வியனுடைய கேட்டிலும் சிறந்ததா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கமும் செவ்வியனுடைய கேடும் சமனாக இருக்குமா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கம் செவ்வியனுடைய கேட்டை விடக் குறைந்ததா? சிந்தித்துப் பார்!
கெட்டவர் செல்வம் பெறுவதும், நல்லவர் வறுமை அடைவதும் ஏன்? பழவினையினால்தானா? சிந்தித்துப் பார்!
கெட்டவர் வறுமையடைவதும், நல்லவர் செல்வம் பெறுவதும்கூடப் பழவினையினால்தானா? சிந்தித்துப் பார்!
பழவினை என்று ஒன்று இருக்குமா? இருந்தாலும் அது உணர்வு, அறிவு முதலிய வேறு பலவற்றிற்கும் இருக்கலாமே தவிர, ஓயாது உருண்டு ஓடிக்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும் பொருளுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? சிந்தித்துப் பார்!
அவ்வியான் பெற்ற ஆக்கம் உண்மையிலேயே ஆக்கந்தானா? செவ்வியான் பெற்ற கேடும் உண்மையிலேயே கேடுதானா? சிந்தித்துப் பார்!
பொறாமைக் குணமுடைய அவ்வியன் தான் பெற்ற செல்வத்தை ஒரு செல்வமாகவே கருதமாட்டானே! கருதினால், அவன் அவ்வியனாக இருக்கமாட்டானே! அவனே தன் செல்வத்தை ஆக்கம் என்று கருதாத போது, நீ கருதுவது எப்படி? சிந்தித்துப் பார்?
பொறுமையுள்ளம் படைத்த செவ்வியன் தான் அடைந்த துன்பத்தை ஒரு துன்பமாகவே கருத மாட்டானே! கருதினால், அவன் செவ்வியனாக இருக்க மாட்டானே! அவனே அதைக் கேடு என்றும், துன்பம் என்றும் கருதாதபோது, நீ கருதுவது எப்படி? சிந்தித்துப் பார்!
ஆக்கம் அடைந்துள்ள அவன் அவ்வியன்தானா? கேடு அடைந்துள்ள அவன் செவ்வியன்தானா? அவனே அப்படிக் கருதுகின்றனா? நீ அப்படி நினைக்கிறாயா? சிந்தித்துப் பார்!
உள்ளபடியே அவ்வியரில் ஆக்கம் அடைபவரும், செவ்வியரில் கேடு அடைபவரும் எங்கேனும் ஒருவர் இருவர் இருப்பாரா? எல்லோருமே அப்படித்தானா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு வந்திருக்கும் ஆக்கம் அவனைக் கெடுக்க வந்திருக்குமோ? செவ்வியனுக்கு வந்திருக்கும் கேடு அவனை உயர்த்த வந்திருக்குமோ? சிந்தித்துப்பார்!
வறுமை வந்ததன் பொருட்டுத் தீ வழி நடப்பவனுக்கு வந்த செல்வம், அவனைத் திருத்த இருக்காதா? செல்வம் வந்ததன் பொருட்டுத் தவறி நடக்கும் நல்லவனுக்கு வந்த வறுமையும் அவனைத் திருத்த இருக்காதா? சிந்தித்துப் பார்!
கெட்டவனுக்கு வந்த செல்வம் கெட்ட வழியில் தானே வந்திருக்கும். இது நல்லதா? நல்லவனுக்கு வந்த வறுமை நல்ல வழியில்தானே வந்திருக்கும். இது கெட்டதா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு ஆக்கம் வந்தால் அது அவனுக்கும் பயன்படாது. செவ்வியனுக்குக் கேடு வந்தால், அது அவனையும் வருத்தாது. இவற்றில் எது சிறப்பு? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு வந்த ஆக்கம் செவ்வியனிடத்து இருந்தால் என்னவாகும்? செவ்வியனுக்கு வந்த வறுமை அவ்வியனிடத்திருந்தால் என்னவாகும்? நினைத்தாலே நெஞ்சம் நடுக்குறுமே. நடுக்குறாமல், சிந்தித்துப்பார்!
அவ்வியனுடைய ஆக்கத்தையும், செவ்வியனுடைய ஆக்கத்தையும் ஒப்பு நோக்கு. இவை நச்சுமரமும் பயன் மரமும் போன்று இல்லையா? சிந்தித்துப் பார்!
நல்வழி நடப்பவனுக்கு வந்த கேட்டையும், தீவழி நடப்பவனுக்கு வந்த கேட்டையும் ஒப்புக் நோக்கு. பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும், மண்ணின் குடமுடைந்தால் என்னாகும்? சிந்தித்துப் பார்!
ஆக்கம் என்பது அது உண்டாக்கும் மகிழ்ச்சியையும், கேடு என்பது அது விளைவிக்கும் துன்பத்தையும் பொறுத்தது. இதில் பொறாமைக் குணமுள்ளவன் தான் பெற்ற செல்வத்தால் மகிழ்ச்சியடைகிறானா? அஃதில்லாதவன் தான் பெற்ற வறுமையால் துன்பம் அடைகிறானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? சிந்தித்துப் பார்!
சிறுமுள் தைத்தாலும் வாடிவருந்தும் நரியையும், உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப் பெற்றபோதும் பீடுநடை நடந்து தன் பெருமையை நிலைநிறுத்தும் யானையையும் காணும்பொழுது, செவ்வியனுடையதைக் கேடு என்று கூறுவதெப்படி? சிந்தித்துப் பார்!
“நினைக்கப்படும்” என்ற ஏழு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொற்றொடர், இக் குறளிலிருந்து “நினைத்துப் பார்க்கவேண்டியவை” என்ற பொருளைத் தந்து, இத்தனை வகையாகவும் நம்மை நினைத்துப் பார்க்கச் செய்துவிட்டது. இக் குறள் தரும் பொருள் இதுதானா? இது சிந்தனையைத் தூண்டிவிடுவதோடு நின்றுவிட்டதா? “முடிவு” ஒன்றுமில்லையா? என்று கேட்கிறீர்கள்? இதோ முடிவு!
“அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்வியானுக்குக் கேடும் வராது. வந்தாலும், அவை ஆக்கமும் கேடுமாயிராது. இருந்தாலும், அவர் அவ்வியராகவும், செவ்வியராகவும் இரார். இருந்தாலும், அவர்கட்கு ஆக்கமும் கேடும் பழவினையால் வராது. ஒருக்கால் வந்தாலும் நிலைத்து நில்லாது” என்பதே. இக் குறளின் பொருள். இதனை இக் குறளிலுள்ள “நினைக்கப்படும்” என்ற இரு சொற்களும் விளக்கிக் கொண்டிருக்கின்றன. நினைக்க-நினைத்துப் பார்க்க, படும்-புலனாகும்.
அது மட்டுமல்ல. “நீ கண்ணாற் காண்கின்ற ஆக்கத் தினையும், கேட்டினையும் ஆக்கம் என்றும், கேடு என்றும் கருதிவிடாதே! இவை நினைக்க-நினைத்துப் பார்க்கக் கெடும்-இல்லாமற் போய்விடும்” என்பதும் இதன் மற்றொரு பொருளாகும்.
“இதுவா இக் குறளின் பொருள்? இதுதானா வள்ளுவரின் கருத்து” என்று ஐயப்படுவார்க்கும், இதனை அடுத்துள்ள குறள் வெளிப்படையாக விடை கூறிக் கொண்டிருக்கிறது. அது,
“அவ்வித்து அகன்றாரும் இல்லை, அஃதில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்” என்பது. இதன் பொருள், “பொறாமை கொண்டவர் வாழ்ந்தது மில்லை; அஃதில்லாதவர் கெட்டது மில்லை” என்பதே. இதுவும் நினைக்கப்படும். நினைத்துப் பார்த்தால் விளங்கும்.
படித்தீர்களா? நினைத்துப் பார்த்தீர்களா? பொருள் நன்றாய் விளங்கிற்றா? இன்னும் ஒருமுறை படியுங்கள், இக்குறளை.
"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்."
எப்படிக் குறள்? எத்தகையர் வள்ளுவர்? எப்படி அவரது நினைவு உள்ளம்? இந்த ஒரு குறளே உங்களின் கோணிய நெஞ்சை நிமிர்ந்த நெஞ்சாக ஆக்கப் பயன்படுமானால், பிற குறள்கள் என்னென்ன பயனைத் தரும்? எண்ணிப் பாருங்கள்! எடுங்கள் குறளை படியுங்கள் நன்றாக! மேற்போக்காக அல்ல, ஊன்றிப் படியுங்கள்; உண்மை விளங்கும். வாழ்வும் வளம் பெறும். ஏனெனில் குறள் ஒரு வாழ்வு நூல்!
வாழ்க வள்ளுவர்!
வளர்க குறள்நெறி!
5. சுற்றம் கெடும்
"கொடுப்ய தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “அழுக்காறாமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.
அழுக்காறு என்பது பொறாமை எனப்படும். அழுக்காறாமை என்பது பொறாமையின்மை என்றாகும். “பொறையுடைமை” பற்றிக் கூறிய பின்னும், “பிறர் பொருளை விரும்பாமை” பற்றிக் கூறுவதன் முன்னும், “பொறாமை கொள்ளாமை” பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும்.
அழுக்கறுத்தல் உள்ளத்தை அழுக்குப்படுத்தல். அழுக்கறுப்பான் உள்ளத்தை அழுக்குப்படுத்திக் கொள்பவன். பொறாமை அதன் விளைவு; தடுப்பது அவனது செயல்.
உள்ளத்தை அழுக்குப்படுத்திக் கொண்டவன் நினைப்பது—கேடு. சொல்வது-பழிச்சொல். செய்வது-இழிவினை. ஆதலாலே, அது தீநெறி ஆகிறது.
"ஒருவன் பிறனுக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்பட்டு, அதனைத் தடுப்பது தவறு. அது அவனையும், அவனது சுற்றத்தாரையும் கெடுத்துவிடும்" என்பது இக் குறளின் பொருள்.
ஒருவன் கொடுப்பதை-படிப்பதை-முன்னேறு வதைக் கண்டு விரும்பித் தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என முயற்சிப்பது “பொறாமை” ஆகாது. அது “ஊக்கம்” என்றாகிவிடும். தா னு ம் அவ்வாறு செய்யாமல், பிறர் செய்வதையும் பொறாமல், அவனைத் தடுக்கும் இழிசெயலே “அழுக்கறுத்தல்” என்றாகும். இதனையே இக் குறளிலுள்ள “கொடுப்ப தழுக் கறுத்தல்” என்பது கூறுகிறது.
“அழுக்காறு கொண்டு தடுப்பது தீது; அவன் கெடுவான்” எனக் கூறவந்த வள்ளுவர், அவ்வாறு கூறாமல் “தடுப்பவனது சுற்றம் கெடும்” என இக் குறளிற் கூறியிருப்பது ஆராயத் தக்கதாகும்.
“கேடு” அடைவதற்கும் ஒரு அளவுண்டு. உண்பதற்கு நல்லுணவு கிடைக்காத அளவிற்குச் சிலர் கேடடைவர்; ஆனால், இவனது சுற்றமோ உண்ணுவதற்கு எதுவுமே கிடைக்காத அளவிற்குக் கேடுறுமாம். அது மட்டுமல்ல, உடுத்துவதற்கு நல்லாடை கிடைக்காத அளவிற்குச் சிலர் கேடடைவர்; ஆனால், இவனது சுற்றமோ உடுத்து வதற்கு எதுவுமே கிடைக்காத அளவிற்குக் கேடுறுமாம். இவ்வுண்மையை, இக் குறளிலுள்ள “அழுக்கறுப்பான் சுற்றம் உண்பதூஉம், உடுப்பதூஉம் இன்றிக் கெடும்” என்ற சொற்றொடரால் நன்கறியலாம்.
உடையின்றேல் இழிந்துபோவான். உணவின்றேல் மெலிந்து போவான். அதுவும், ஒருவனுக்கு இந்த இழி நிலை; வீடு, நிலம், தொழில், பணம், பண்டம் முதலிய அனைத்தும் இழந்த பிறகே ஏற்படும். ஆதலின் இக் கேடு பெருங்கேடு ஆகும் என்பதையும், இவ்விழப்பு பேரிழவு ஆகும் என்பதையும், இக்குறளிலுள்ள “இன்றிக் கெடும்” என்ற இரு சொற்களும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
அழுக்காறு கொண்டவன் கெடும்பொழுது அவனது சுற்றத்தார் நன்னிலையில் இருந்தால், அவனைக் கெட விடாது காப்பாற்றிவிடுவர். ஆகவே, அதற்கும் வழியில்லாமல், அவர்களும் கெட்டுவிடுவர் என்பதே “சுற்றம் கெடும்” என்பதன் பொருள்.
ஒருவன் பிறரிடமிருந்து பெறுவதை நீ தடுத்தால், சுற்றத்தாரிடமிருந்து பெறவேண்டிய இழிநிலை உனக்கே வந்துவிடும் என எச்சரிப்பதாகவும், “சுற்றம் கெடும்” என்பது இக்குறளில் அமைந்திருக்கிறது.
அழுக்காறுகொண்டவனுடைய சுற்றத்தார் கெட்டு விடுவர். அப்பொழுது அவன் தன்னிடமிருப்பதையெல்லாம் அவர்களுக்கு வழங்கி வழங்கி, இறுதியில் அவனும் கெட நேரிட்டுவிடும். என்பதும், “சுற்றம் கெடும்” என்பதன் பொருளாகும்.
ஒருவன் பிறனுக்கு வழங்குவதை நீ தடுத்தால், உன் சுற்றத்தார்க்கு வழங்கவேண்டிய நிலை உனக்கே வந்துவிடும் என்பதையும், “சுற்றம் கெடும்” என்பது சொல்லிக் கொண்டிருக்கிறது.
நீயும் உனது சுற்றத்தினரும் ஒருவருக்கொருவர் வழங்கியோ, வழங்க முடியாமலோ, இருவருமே கெட்டு விடுவீர்கள் என்ற உண்மையும், “சுற்றம் கெடும்” என்பதில் அடங்கியிருக்கிறது.
நீயும் கெட்டு உனது சுற்றமுங் கெட்டுவிடும்; ஆதலின் உனக்கென் றில்லாவிடினும் உனது சுற்றத்தினரைக் காப்பாற்ற என்றாவது நீ பிறரிடம் சென்று இரக்கவேண்டி வரும் என்ற கருத்தும், "சுற்றம் கெடும்" என்பதில் இல்லாமலில்லை.
அழுக்கறுப்பவனும் கெட்டு, அவனது சுற்றத்தாரும் கெட்டு, இரந்து வாழும் இழிநிலைக்கு அவர்களின் கூட்டமே வந்துவிடுமானால், அவர்களால் சமூகத்திற்கு விளையப்போகும் கொடுமைகள் எது எதுவாக விருக்கும் என்பதையும், இக்குறளிலுள்ள "கெடும்" என்ற சொல் நம்மை சிந்திக்கச் செய்கிறது.
ஒருவனுக்குத் தான் கெடுவதைவிட தன் சுற்றத்தார் கெடுவதால் உண்டாகும் துன்பம் அதிகமாகும். ஆகவே அழுக்கறுக்கும் ஒருவன் அப்பெருந் துன்பத்தை அடைய நேரிட்டுவிடும் என்பதையும், "சுற்றம்கெடும்" என்றதால் வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார் போலும்.
எப்போதுமே ஏதுமில்லாது தாழ்ந்து வாழ்ந்தவர் படும் துன்பத்தைவிட, உயர்ந்து வாழ்ந்தவர் தாழ்ந்து படுந் துன்பம் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதை, இக்குறளிலுள்ள (கெடாது) 'சுற்றம் கெடும்' என்ற எச்சரிக்கையால் அறிய வேண்டியிருக்கிறது.
ஒருவன் பிறனுக்கு வழங்குவதைக் காண உன்னால் சிறிதும் பொறுக்கமுடியாமல் போகுமானால், பின்னால் அதனால் விளையும் உன் கேட்டினைக் கண்டும், உனது சுற்றத்தாரின் கேட்டினைக் கண்டும், பொறுக்க முடியாத துன்பங்களையெல்லாம் பொறுக்கவேண்டி வ ரு ம் என்பதே "சுற்றம் கெடும்" என்பதிலுள்ள புதை பொருளாகும்.
கொடுப்பதைத் தடுப்பதால் கொடுப்பவர் உள்ளமும் துன்பப்படும், பெற இருந்தவர் உள்ளமும் துன்பப்படும். ஆகவே, அழுக்கறுக்கும் ஒருவன் அவர்களிருவரின் துன்பங்களையும் தான் ஒருவனாகவே இருந்து தனித்து இரந்தும் அடைய நேரிடும் என்பதும் இக்குறளின் கருத்து.
ஒருவனுக்கு அவனது முயற்சி கொடுக்கும் செல்வத்தையும், பெற்றோர் தம் மக்களுக்கு வழங்கும் செல்வத்தையும் கண்டு அழுக்காறு கொள்வது தவறு என்பதையும், “கொடுப்ப தழுக்கறுப்பான்” என்ற சொற்றொடரிற் கண்டு மகிழலாம்.
பொறுமையை இழந்து, பொறாமையே கொள்ளும் குணம் படைத்த ஒருவனை, அவனது சுற்றத்தாரும் வெறுத்து ஒதுக்கி விடுவர். அவனைச் சுற்றி எவருமே இரார். ஆதலின் அவனுக்கு “சுற்றம் கெடும்” என நாமும் கூற வேண்டியதுதான்.
உடல் அழுக்கிலும் மன அழுக்கு மிகவும் வெறுக்கத்தக்கது. உடலிற்படும் அழுக்கு உடல் நலத்தைக் கெடுத்து விடுவதுபோல, மனத்திற் படும் அழுக்கு மகிழ்வதற்குரிய வாழ்வையே கெடுத்துவிடும் என்பது இக்குறள் கூறாமற் கூறும் கருத்தாகும்.
அழுக்கற்று வாழும் வாழ்வே உயர்ந்த வாழ்வு. ஆதலின் எவ்விடத்தும், எப்பொழுதும் அழுக்காறு கொள்ளாதே. அது உன்னைத் தீநெறியிற் புகுத்தித் தீயுழி உய்த்துவிடும். அதனால் நீ கெடுவது மட்டுமல்ல, உனது சுற்றமும் கெட்டுவிடும் என்பதே இக்குறளின் முடிந்த முடிவாகும். குறள் வேண்டுமா? படியுங்கள் மறுமுறையும்.
"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்."
அழுக்காறின் கொடுமையையும், அதன் விளைவையும் விளக்கவந்த இக்குறள். அதோடு சுற்றத்தாரின் பெருமையையும், அவர்களை இழப்பதால் உண்டாகும் விளைவையும் விரிந்த அளவில் விளக்குகின்ற சிறப்பு, வியப்பிற்குரிய ஒன்றாகும்.
எப்படி இக்குறள்? எத்தகையர் வள்ளுவர்? எடுங்கள் குறளை; படியுங்கள் நன்றாக. அந்த அளவோடு விட்டுவிடாதீர்கள். செயலிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.
ஈத்துவக்கும் இன்பம் அறிந்தோர் சான்றோர்.
ஈயாது வைத்திருக்கும் மக்கள் வறியவர்.
ஈவதையும் தடுத்துக் கெடுவோர் கயவர்.
இதனை அறிந்துகொண்டு வாழ்வதே நல்லது.
வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் குறள்நெறி!
6. கொன்றதுபோலும் நிரப்பு
"இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு."
என்பது திருக்குறளில் ஒரு குறள்.
“நேற்று வந்து என்னைக் கொன்றது போன்ற வறுமைத் துன்பம் இன்றும் வருமோ?” என்பது இதன் பொருள். இது “நல்குரவு” என்ற தலைப்பில் வந்த ஒன்று.
104, 105, 106 அதிகாரங்கள் என, ‘உழவு’ ‘நல்குரவு’ ‘இரவு’ என்பன அமைந்து, சங்கிலித் தொடர்போன்று ஒன்றை ஒன்று பற்றிநின்று ஒர் உண்மையை விளக்கிக் கொண்டிருக்கின்றன. அது ‘உழவுத்தொழிலே தலை சிறந்தது. இன்றேல் வறுமை வரும். வந்தால் இரந்துண்ண நேரிடும்’ என்பதே.
நல்குரவு என்பது வறுமை. வடமொழியாளர் இதனைத் ‘தரித்திரம்’ என்பர். வள்ளுவர் இதனை இன்மை, இடும்பை, நிரப்பு என்ற சொற்களாற் காட்டுகிறார். வறுமை அடைந்த மக்களை ‘நல்கூர்ந்தார்’ ‘துப்புரவு இல்லார்’ எனக் குறிப்பிடுகிறார்.
இன்மை, இல்லாமையையும்; இடும்பை, துன்பத்தையும் குறிப்பன. நிரப்பு நிறைவையும், குறைவையும் காட்டி நிற்கும் ஒரு சொல்; அது இக்குறளின் இறுதியில் நின்று துன்ப நிறைவையும், பொருட் குறைவையும் காட்டுவதோடு, வள்ளுவரது புலமையையும் காட்டி நிற்கிறது.
வறுமை வாய்ப்பட்டவன் அடையும் துன்பம் அளவு கடந்தது எனினும், வள்ளுவர் அதற்கொரு அளவு காட்ட முயன்றார்; முடியவில்லை. சம அளவு துன்பத்தை விளைவிக்கும் ஒன்றையாவது காட்டியாகவேண்டும் என எண்ணினார். வெற்றிபெற்று நமக்கும் காட்டிவிட்டார். அது எது தெரியுமா? "வறுமை விளைக்கின்ற அளவு து ன் ப த் தை விளைவிக்கக்கூடியது வறுமைதான்" என்பதே.
வறுமைத் துன்பத்திற்கு ஒரு உவமைத் துன்பத்தை காட்ட வள்ளுவர் தேடி அலைந்தார். சாவுத் துன்பம் எதிர்ப்பட்டது; அது துன்பமே அல்ல என ஒதுக்கி விட்டார். கொலைத் துன்பது குறுக்கிட்டது; இது ஒரு சிறு துன்பந்தானே, கொல்லப்பட்ட பிறகு அத்துன்பமுமிராதே எனத் தள்ளிவிட்டார். இறுதியாக, அவர் கண்ட உவமைத்துன்பம் எது தெரியுமா? கொல்லாமற் கொல்லும் கொடுமை; அக் கொடுமையை இக் குறளிலுள்ள "கொன்றது போலும்" என்ற உவமையிற் கண்டு மகிழுங்கள்.
நெருநல் என்பது நேற்று என்றாகும். "நேற்று வந்த துன்பம்" என்றே இதற்குப் பலரும் பொருள் கூறியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் படித்தேன். அது தவறு. குறளில் நெருநல் மட்டுமில்லை; "உம்" ஒன்றும் அதனுடன் சேர்ந்திருக்கிறது. அதற்கு 'நேற்றும்' என்று பொருள் காண்பதே உண்மையாகவிருக்கும். இதனால் வறுமைத் துன்பம் அவனை நேற்று மட்டும் வந்து வருத்தவில்லை. அதற்கு முன்பும் பல தடவை வந்து அவனை வருத்தியிருக்கிறது என்று கொள்ளவேண்டியிருக்கிறது.
"நாள்தோறும் வந்து என்னைத் துன்புறுத்தும் வறுமைத்துன்பம் நேற்றும் வந்தது: அது இன்றும் வரும் போலிருக்கிறது. வந்தால் நான் என்ன செய்வேன்?” என்று வறுமைத் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் ஒருவன் ஏங்கி அஞ்சி நடுங்கும் காட்சியை இக் குறள் படம் பிடித்துக் காட்டுகிறது. இதைக் கானும் பொழுது நமது உள்ளமும் நடுங்குகிறது.
“வருவது” என்ற ஒரு சொல் இக்குறளிலிருந்து நாள் தோறும் வருவது நேற்றும் வந்தது, இன்றும் வரும் போலிருக்கிறது என்ற பொருளைமட்டும் காட்டிக் கொண்டில்லை. “வந்த அது நாள்தோறும் போய்க் கொண்டிருக்கிறது” என்ற பொருளையும் காட்டிக் கொண்டிருக்கிறது.
“வந்து நிலைத்து நின்றுவிடும் வறுமையைவிட, அடிக்கடி வந்து போகும் வறுமை அதிகத் துன்பத்தை விளைவிக்கும்” என்பது, இக்குறளில் புதைத்து கிடக்கும் பொருளாகும்.
வறுமையாளர் இருவகை. எப்போதுமே இல்லாதவர்; இடையிலே இல்லாமற்போனவர் என்று. இடையிலே இல்லாமற்போனவர் அடையுந் துன்பமும் இருவகை. வருவார்க்கு வழங்கப் பொருளில்லாமை, வந்த பசிக்கு உணவில்லாமை என்று. இதனை ஈய முடியாமை, துய்க்க முடியாமை என்பர். இவ்விரண்டுகூட நிலைத்து நில்லாமல் அடிக்கடி வந்துபோய் விளைக்கும் கொடுமையையே, இக்குறள் “கொன்றது போலும் நிரப்பு” என்று கூறிக்கொண்டிருக்கிறது.
இரப்போர்க்கு இல்லையென்னாது வழங்கிவந்த ஒரு பெருமகனுக்கு, உண்ண உணவு இல்லாத வருத்தம் தரும் துன்பத்தைவிட வழங்கப் பொருளில்லாது வருந்தும் துன்பம் மிகப்பெரியதாக விருக்குமாம். பிறருக்கு வழங்க முடியாமல் வருந்தும் நல்குரவை வள்ளுவர் “அறஞ் சாரா நல்குரவு” என அறிமுகப்படுத்துகிறார். அவனது சொல்லிலும் சோர்வு காணப்படுமாம். இவையனைத்தும் வள்ளுவர் கருத்துக்கள். இவற்றை எண்ணிப் பார்க்கும் பொழுது, “கொன்றது போலும் நிரப்பு” நம்மையும் கொன்றுவிடும்போலத் தோன்கிறது.
நல்ல வழியிற் பொருளைத்தேடி நல்லோர்க்கு வழங்கி வந்த ஒரு நன்மகன் வறுமையடைந்ததும், வருகிறவர்களுக்கு வழங்க முடியாமற் போயிற்று என்று எண்ணுந் துன்பம்; பிறரது துன்பத்தைப் போக்க முடியாது வாழ்கின்றன வாழ்வு என்ன வாழ்வு என்று எண்ணுந் துன்பம்; பலநாள் வழங்கிவந்த நான் இல்லை யென்று இப்பொழுது எப்படிக் கூறுவது என்று எண்ணுந்துன்பம்; நாம் வறுமைப்பட்டோம் என்பதை நல்லறிஞர்கள் அறிந்தால், நம்மிடம் வாராமற் போய் விடுவார்களே என்று வருந்துந் துன்பம்; ஆகிய அனைத்தையும் ‘கொன்றது போலும் நிரப்பு’ என்ற சொற்றொடர் தன்னுள் நிரப்பிக் காட்டிக்கொண்டுதானிருக்கிறது.
“மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, சிற்றின்பம் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம்” என ஒரு புலவர் கூறினார். வள்ளுவர் பதினோராவதாக உறக்கமும் பறந்து போய்விடும் என்று கூறுகிறார். விறகு எரிக்கும் நெருப்பினுள்ளே ஒருவன் உறங்கினாலும் உறங்கலாம், பசி எரிக்கும் நெருப்பினுள்ளே எவனும் உறங்க முடியாது என முடிவு கட்டிக் கூறிவிட்டார்.
பசி வந்த மக்கள் அதைப் போக்குவதற்கு வேறு வழியின்றி இரக்க எண்ணுந் துன்பம், இரப்பதற்குச் செல்வர்களை நோக்கிச் செல்லுந் துன்பம், அவர்களைக் காத்திருந்து கானுந் துன்பம், கண்டு கெஞ்சிக் கேட்குந் துன்பம், கேட்டதும் அவர் இல்லை என்பரோ என்று எண்ணுந் துன்பம், கொடுப்பதாயினும் அதை அவரது வேலையாட்களிடமிருந்து கைதாழப் பெறுந் துன்பம், பெற்றதை உண்ணும்பொழுது தம் இழி நிலையை எண்ணுந் துன்பம், இவற்றை எண்ணி எண்ணி இரவில் உறங்கமுடியாமல் துடிக்குந் துன்பம், அதனால் விளையும் உடல்நலக் கேட்டின் துன்பம், ஆகிய பல்வேறு துன்பங்களையும் "கொன்றது போலும் நிரப்பு" தன்னுள் நிரப்பியே காட்டுகிறது.
"ஈயாமை துவ்வாமை ஆகிய இல்லாமை இரண்டும் ஒருருவாகி, ஒருவனைப்பற்றி அவனை உண்ணமுடியாமலும், வழங்கமுடியாமலும் வாழச்செய்கின்ற வாழ்வு என்ன வாழ்வு? அவ்விதம் ஒருவனை வாழவைப்பதை விடக் கொன்று மடித்துவிடுவது நல்லது. இந்நிரப்பு அதையும் செய்யாமல் நாள்தோறும் கொல்வது போலும் கொடுமைகளை நிரப்பிக்கொண்டே வருகிறது" என இக்குறள் கூறுவது நம்மையுங் கலங்கவைத்துவிடுகிறது.
'நாள்தோறுங் கொல்லாமற் கொல்லுகின்ற இத் தகைய வறுமையானது இன்றும் வருமோ?’ என்றெண்ணி ஒருவன் அஞ்சி நடுங்குகின்ற நடுக்கமானது, நேற்றுக் கொல்லவந்த புலி இன்றும் கொல்ல வருமோ? நேற்று வந்து அழித்த வெள்ளம் இன்றும் வந்து
அழிக்குமோ?' என்று ஒருவன் அஞ்சி ஏங்குவதிலும் அதிகமானது என்பதை. “இன்றும் வருவது கொல்லோ” என்ற சொற்கள் அறிவித்துக்கொண்டிருக்கின்றன.
உழுது உழைத்துண்டு வாழ முடியாதவனை வறுமை கைப்பற்றி இரந்துண்ணும்படி செய்துவிடும். அது உப்புக்கும் கஞ்சிக்கும் கூற்றாக இருக்குமே தவிர, வாழ்வாக இராது. அஞ்சி நடுங்கி, இரந்துண்டு வாழும் இந்நிலையை எண்ணும்பொழுது அதைவிட மடிவது நல்லது எனத் தோன்றும் என்பன இவ்வதிகாரத்தின் திரண்ட கருத்துக்கள், இதுவும் நம்மைக் கொல்வது போன்றிருக்கிறது.
குறளைப் படியுங்கள் மறுமுறையும்,
"இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு."
வாழ்க குறள் அறம்!
வளர்க குறள் நெறி!!
7. அல்லவை தேய
"அல்லவை தேய அறம் பெருகும்
நல்லவை நாடி இனிய சொலின்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது ‘இனியவை கூறல்’ என்ற தலைப்பில் வந்த ஒன்று.
இதற்கு முன்னே “விருந்து” ஓம்புதலைப் பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்பெறுகிறது.
“நல்லவைகளை நாடி இனிய சொற்களைச் சொன்னால் அல்லவை தேயும், அறம் பெருகும்” என்பது இதன் பொருள்.
தத்துவங்கள் 96 என்பர் அறிஞர், இக்குறள் திருக்குறளில் 9 வதாக அமைந்து, இன்சொல்லின் தத்துவங்களையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்கின்றது போலும்.
“இனியவை கூறல் விருந்தோம்புவார்க்கு வேண்டிய தொன்று” என்பது, பரிமேலழகர் கருத்து. விருந்தோம்பல் இயலாதார்க்குத்தான் இது முதலில் வேண்டியது என்பது பிறரது கருத்து.
ஆறு எழுத்துக்களால் ஆன மூன்று சொற்கள்தான் மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்துவன். அவை "எண், சொல், செய்“ என்பன. இதில் எண்ணத்தை உண்டாக்கிச் செயலை வளர்க்கும் ஆ ற் ற ல் ”சொல்"லுக்கே உண்டு. அச்சொல் இடையிலிருந்தாலும் இக்குறளின் இறுதியில் நின்று ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
சொற்களைச் சொல்வதிலும் நல்ல சொற்களைத் தேடி இனிமை கலந்து சொல்லவேண்டும் என்பது இக்குறளின் முடிந்த முடிபு.
“இனிய சொலின்” என்ற இரு சொற்கள் இக்குறளின் ஈற்றடியின் இறுதியில் வந்துள்ளன. “இனிய சொற்களைச் சொன்னால்” என்பது அதன் பொருள். இதிலிருந்து மக்கள் பெரும்பான்மையாக அவ்வாறு சொல்வதில்லை என்பதும் விளங்குகிறது.
இனிமையாகச் சொல்வதிலும் தீயன நாடிச் சொல்வதுண்டு. இது உள்ளத்திலே தீமையை வைத்து, உதட்டிலே உறவு வைத்துப் பேசுவதாகும். இதை வள்ளுவர் வெறுத்து, இனிமையாகச் சொல்வதிலும் நல்லவை நாடிச் சொல்லவேண்டும் என இக்குறளில் வற்புறுத்துகிறார். இது இன்சொல்லின் உயிரோட்டத்தையே நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது.
நல்லவை நாடி இனிய சொலின் அறம் பெருகும் என இக்குறள் கூறுவதானது, நல்லதை எண்ணி, நல்லதைச் சொன்னால் நல்லது விளையும் என இன்சொல்லின் விளைவையே நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது.
இன்சொல்லின் விளைவு நன்மைகள் விளைவது மட்டுமல்ல; “தீமைகளும் அழியும். அதுவும் தேய்ந்து தேய்ந்து அழிந்தொழியும்” என்று கூறி, இக்குறள் நமக்கு மற்றொரு நன்மையையும் வழங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வுண்மையை, இக்குறளிலுள்ள “அல்லவை தேய” என்னும் சொற்களால் நன்கறியலாம்.
இனியவை கூறலுக்கும் இக்குறள் ஒரு இலக்கணமாக அமைந்து நம்மை மகிழ்விக்கிறது. ‘மறம்’ எனக் கூறுவதும் “தீயவை” எனக் கூறுவதும் இன்னாதன என எண்ணி, “அறமல்லாதவை” “நல்லதல்லாதவை” என்ற இனிய சொற்களால் இக்குறள் அமைந்திருப்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.
“அறநெறியில் நிற்பார்முன் தீமைகள் நிற்கா” என்று நாலடியார் கூறியிருப்பது இக்குறளின் விளக்கமென்றே தோன்றுகிறது. இனிய சொற்களைத் கூறிப் பிறரை மகிழ்விப்பதும் அறச்செயல்களில் ஒன்றேயாம். இதனை, முகம் மலர்ந்து ஈவதிலும் அகம் மலர்ந்த இன்சொல் நல்லது என்ற குறளாலும் அறியலாம்.
“இன்சொல்” சொல்பவர்க்கு மட்டும் நலந்தருவ தல்ல. அது அதனைக் கேட்போர்க்கும் நலந்தருவதாகும், அவரும் இன்சொல் வயப்பட்டு அதனால் நல்லன நாடிச் செயல்பட முடிகிறது.
“நன்மை பயக்கும் ஒன்றைச் சொல்லும்போதுகூட அதைக் கடுஞ்சொற்களால் சொல்லக்கூடாது” என, நல்லவை நாடி இனிய சொலின் என்ற சொற்றொடர் நம்மை எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறது.
“வன்சொல் துன்பம் தரும். அதுவும் தீயவை நாடிச் சொலின் பெருந்துன்பம் விளையும். அதனால் தீயவை வளர்ந்துகொண்டே வரும். அது மட்டுமல்ல, உள்ள அறமும்கூடத் தேய்ந்துவிடும்” என்பன இக் குறளில் புதைந்து கிடக்கும் பொருள்களாகும்.
"இன்சொல் நல்லது; எவர்க்கும் நல்லது; எப்போதும் நல்லது. அதை வழங்குவதும் எளிது. அதனால் இழப்பு எதுவுமிராது. பெறுவதோ நன்மை, அடைவதோ இனிமை. அவை மட்டுமல்ல, ஏற்கனவேயுள்ள தீமையுங்கூட அழித்தொழிந்து போய்விடும்" என்பது இக்குறளின் திரண்ட கருத்து.
படியுங்கள் மறுபடியும் இக்குறளை “அல்லவை தேய அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்.”
இக்குறள் உங்களுக்குப் பயன்படுகிறதா? இன்றேல் பயன்படுத்திப் பாருங்கள். ஓய்வு உள்ளபோதெல்லாம் திருக்குறளைப் படியுங்கள். அதனால், நீங்கள் பெரும் பயனைப் பெறுவீர்கள்.
பயணப் பெட்டிகளில் எது எதையே வைத்துக் கொண்டு போகிறீர்கள். ஒரு திருக்குறளையும் அதில் வைத்துக்கொண்டு போவது நல்லது. அது வழிக்குத் துணையாகவும், பின் வாழ்வுக்குத் துணையாகவும் அமையும் ஒரு தனிப்பெருஞ் செல்வம்.
வாழட்டும் தமிழ்ப் பண்பு!
வளரட்டும் குறள் நெறி!
8. மெய்வேல் பறியா நகும்
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
என்பது திருக்குறளில் உள்ள ஒரு குறள். ‘தன்னைக் கொல்லவந்த யானையின்மீது கைவேலை எறிந்து போக்கிவிட்டுப் பகைவன் தன்மீது எறிந்த வேலைப் பறித்து மகிழ்ந்தான்’ என்பது குறளின் பொருள்.
இக்குறள் படைச்செருக்கு என்ற அதிகாரத்தில் வந்துள்ளது. படைச்செருக்கு என்பது. படையின் பெருமை, வீரரின் சிறப்பு என்று ஆகும்.
உலக மக்கள் பலரிடமும் காணப்படுகின்ற வீரத்திற்கும், தமிழகத்தில் காணப்பெறும் வீரத்திற்கும் வேறுபாடு உண்டு. தமிழகத்தின் வீரம் ஒரு தனிப்பண்பு வாய்ந்தது. இதனைத் ‘தமிழ் வீரம்’ என்றும், ‘தமிழரின் வீரம்’ என்றும் கூறுவர்.
பழங்காலத்துத் தமிழ்மக்களில் சிறந்த பெண் ஆண் ஆகிய இருபாலாரிடத்தும் காணப்பெற்ற வீரச்செயல்களைப் புறநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. எனினும், வள்ளுவரது குறள் இதனை இன்னும் தெளி வாக்கிக் காட்டுகிறது.
தமிழர், முயல் வேட்டைக்குச் செல்லுவதைவிட யானை வேட்டைக்கு செல்லுவதையே பெரிதும் விரும்புவர். அவரது எண்ணம் அத்தகையது.
முயலைக் கொன்று வெற்றி பெறுவதைவிட, யானையை எய்து தோல்வியடைவதையே பெருமையாகக் கொள்ளுவர். அவரது கொள்கை அத்தகையது.
தம்மின் வலிமை குறைந்த எவரையும் தமிழர் தாக்குவதில்லை. மெலியோர் தம்மைத் தாக்க முன் வந்த போதிலும், வலியோர் அவர்களைத் தாக்காது, அவர்களை நோக்கி "போர் எண்ணங்கொண்டு என்முன் நிற்காதே; நின்றால் மடிந்து மண்ணிற் புதையுண்டு நடுகல்லாக நிற்பாய்" என்று கூறி அனுப்பிடுவிடுவர். அவரது அறம் அத்தகையது.
தம்மோடு ஒத்த அல்லது உயர்ந்த வலிமையுடையவரோடு மட்டுமே போரிடுவர். அப்போதுங்கூட பகைவனது வலிமை குறைந்துவிட்டால், மேலும் தாக்காமல் "இன்று போய் நாளை வா" என்று அவர்களை அனுப்பி வைப்பர். அவரது பேராண்மை அத்தகையது!
போர்க்களத்தில் பகைவரை வெகுண்டு நோக்குவர். விழித்துப் பார்க்கும் அக்கண்களை நோக்கி வேல்கள் பறந்து வரும். அப்பொழுதுங்கூட அவர்கள் விழித்த கண்களை இமைப்பதே இல்லை. அவரது போர் ஆண்மை அத்தகையது.
இவை போன்ற பழந்தமிழ் வீரர்களின் பண்பாட்டினைத் திருக்குறள் நிலைத்து நின்று இன்றும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.
இக்கட்டுரையின் தலைப்பில் இருக்கும் குறள் ஒரு போர் வீரனின் சிறந்த வலிமையைக் காட்டும் உயர்ந்த ஓவியமாகும்.
வீரன் போர்க்களம் புகுந்தான். அவனுக்கு வேல் படைக்கருவியாக இருந்தது. பகைவனது யானை ஒன்று அவனைக் கொல்ல வந்தது. அதன்மீது குறிபார்த்து வேலை எறிந்தான். யானையோடு வேலும் போய் விட்டது. வெறுங்கையன் ஆனான். அப்போது பகைவனால் எறியப்பெற்ற வேல் ஒன்று, தன் மார்பின் மீது வந்து பாய்ந்தது. வீரன் அதனைப் பிடுங்கிக் கைப் பற்றிக்கொண்டு நகைத்தான் என்பதே இக்குறள் கூறும் வரலாறு.
“கைவேல் களிற்றொடு போக்கி” என்பது, வேலின் தாக்குதலால் புண்பட்டு வீறிட்டுப் பின்வாங்கி ஓடும் யானையினது உடலோடு வேலும் போய்விட்டது என்பதா? அன்றி, களிற்றினது உடலிற் புகுந்து அதன் உயிரைப் போக்கித் தானும் அதன் உடலில் அழுந்தி மறைந்து போயிற்று என்பதா? புலப்படவில்லை. எனினும், இவை இரண்டுமே வீரனுக்கு வெற்றி தருவ தாகும்.
வெற்றிபெற்ற இவன் தன் கை வெறுமையாயிருப்பதைக்கண்டு மறுபடியும் ஒரு கருவியைப் பெறப் போர்க் களத்திலிருந்து திரும்புகிறான். வீரன் திரும்பி வரும் செய்தியைக் குறளில் உள்ள, “வருபவன்” என்ற சொல்லால் அறிய முடிகிறது. அப்போது மாற்றான் ஒருவன் எறிந்த வேல் ஒன்று அவன் மார்பின்மீது வந்து பாய்கிறது. அதைத் தன் கைகளினால் பற்றிப் பறித்துக் கொண்டே நகைக்கிறான்.
நகும் என்பது நகுதல் என்றாகும். இது நகைத்தல், களித்தல், மகிழ்தல் என்பவைகளைக் குறிக்கும். வீரன் ஏன் நகைத்தான்? எதன் பொருட்டு நகைக்கிறான்? என்று எண்ணும்பொழுதே நமக்கும் ஒரு நகைப்பு உண்டாகிறது.
தேடிச்சென்ற கருவி வழியிலேயே தானே வந்து அகப்பட்டுவிட்டதே என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது மகிழ்ச்சிச் சிரிப்பாகும்.
மார்பில் தைத்த வேல் ஊடுருவிச் சென்று தன்னை வீழ்த்திவிடாமல் கையால் பறித்து எடுக்கும் அளவில் மட்டும் தைத்ததேயென்று நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது வெற்றிச் சிரிப்பாகும்.
கை வே லை வறிந்துவிடுவது வீரர்களுக்கு அழகல்லவே! களிற்றின் மீது மட்டுமே எறிய வேண்டிய வேலை என்மீது எட்டியிருந்து ஏன் எறிந்தான்? ஒரு கால் இவன், மதயானையை ஒழித்த என்னையும் ஒரு மதயானை எனக் கருதி விட்டானோ என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் அது ஏளனச் சிரிப்பு ஆகும்.
என் கைவேலோ யானையின் உடலையும் ஊடுருவித் துளைத்தது. இவ் வேலோ என் உடலையும் துளைக்கவில்லை; இது எதற்குப் பயன்படப்போகிறது? என்று எண்ணிச் சிரித்தானோ? அவ்விதமாயின் இது மனக்குறைச் சிரிப்பு ஆகும்.
வேலைப் பறித்துக் கையிற் பற்றிக்கொண்டு, வேல் எறிந்த வீரன் தன்முன் இல்லாமை கண்டு, "மறைந்திருந்து தாக்கும் கோழை மக்கள் தமிழகத்திலும் உள்ளார்களே" என எண்ணிப் புண்பட்ட மனத்தோடு நகைத்திருப்பானோ? அவ்விதமாயின் இது துன்பச் சிரிப்பு ஆகும்.
தன் மார்பின்மீது வேலால் தாக்கப்பெற்றபோதும், அதை எண்ணி வருந்துவதைவிட்டுத் தன் கைவேலால் தாக்கப்பெற்ற மதயானை ஒன்று அஞ்சி அலறி ஓடுவதைக் கண்டு அகமகிழ்ந்து நகைத்திருப்பானோ? அவ்விதமாயின், இது வெற்றிச் சிரிப்பு ஆகும்.
யானையோடு போரிட்ட களைப்பையும் கருதாது, மாற்றானின் வேலால் உடல் துளைக்கப் பெற்ற களைப்பையும் நினையாது, மீண்டும் போரில் விருப்பங்கொண்டு தன் மெய்யில் அழுந்திய வேலையே பறித்துப் பகைவரை அழைத்துச் சிரித்தானோ? அவ்விதமாயின் அது பயங்கரச் சிரிப்பு ஆகும்.
இச் சிரிப்புகளில் அடங்கியிருக்கிற பொருள்கள் இவ்வளவுதானோ? இன்னும் என்னென்னவோ? யாரால் கண்டு கூறமுடியும்? எத்தனையோ சிரிப்புக்களைக் கண்டு சிரிப்பாய்ச் சிரிக்கின்ற நமக்கு, இவ்வீரனது நகைப்பு ஒரு திகைப்பையே உண்டாக்கிவிடுகிறது.
'மெய்வேல் பறியா நகும்' என்வ நான்கு சொற்களுக்குள்ளாகவே இவ்வளவு கருத்துக்களையும் அடக்கிக் காட்டுகின்ற வள்ளுவரது புலமையும், திறமையும் பாராட்டுதலுக்குரியவையாகும்.
இக்குறளுக்கு உரை கண்ட ஆசிரியர் பரிமேலழகர் தன் கைவேலைக் களிற்றோடு போக்கிய பிறகு, தன்னைக் கொல்லவரும் மற்றொரு யானையைக் கண்டு தன் மெய் வேலைப் பறித்து நகைத்தான் எனக் கூறுகிறார். மற்றொரு யானையை அவர் வருவித்துக் காட்டுகின்ற காட்சி குறளைத் தழுவாவிட்டாலும், வீரத்தைத் தழுவி நிற்பதால் வரவேற்கக்கூடியதே யாகும்.
வேல், அம்பு முதலியவைகளைத் தம் உடம்பில் வாங்கித் திருப்பி எறியும் போர்ச் சிறப்பை,
“கையில் வானி தெரித்தபின் காய்ந்துதம்
மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார்.”
என்ற வில்லி பாரதத்தினாலும்,
"எய்தவன் பகழி யெல்லாம்
பறித்தவன் என்மேல் எய்யும்'
என்ற கம்பராமாயணத்தினாலும் அறிய முடிகிறது. இதிலிருந்து தமிழ் மக்களின் பேராண்மையும் நன்கு விளங்குகிறது.
இவை அனைத்தும், “பழம் பெருமைகள்” என்று வெறுத்து ஒதுக்கிவிடக்கூடியதல்ல. பழம் பெருமைகளை எண்ணி நடப்பது புதிய வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்பதை நாம் நம்புவது நல்லது.
நாட்டின் செழிப்பையும், மொழியின் வளர்ச்சியையும், மக்களின் வீரத்தையும், மறைந்திருந்து தாக்கும் இன்றைய வஞ்சமக்களை ஒழிக்கவும், பகைவர்கள் என்ன செய்தாலும் உறங்கிக்கிடக்கும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவும், இதுபோன்ற பழந்தமிழ் வீரர்களின் வரலாறு நமக்குப் பெரிதும் துணை செய்யும்.
குறளை மற்றொரு முறை படியுங்கள் :
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
வாழட்டும் குறள் நெறி!
வளரட்டும் தமிழர் வீரம்!!
9. எய்தாப் பழி
"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “ஒழுக்கமுடைமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.
ஒழுக்கத்தை அடைந்தவர் உயர்வையும், இழுக்கத்தை அடைந்தவர் பழியையும் அடைவர் என்பது இதன் பொருள்.
ஒழுக்கமுடையவர் உயர்ந்தோராகவும், அதனை இழந்தவர் தாழ்ந்தோராகவும் கருதப்பெறுவர் என்பது குறிப்பு.
ஒழுக்கத்தை நல்லொழுக்கம் எனவும், தீயொழுக்கம் எனவும் குறிப்பிடுவதுண்டு. எனினும், “ஒழுக்கம்” என்பது நல்லொழுக்கத்தை மட்டுமே குறிக்கும் என்பது இக் குறளின் முடிவு.
“மக்களாய்ப் பிறந்தவர்கள் உயர்வை அடைய வேண்டும். அதற்குரிய ஒரே வழி ஒழுக்கத்தைப் பெறுவதுதான்” என்பது, இக்குறளின் மேற்பாதியின் கருத்து.
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை” என்பதனால் அது இல்லாத கல்வி, கேள்வி, ஆடை, அணி, பட்டம், பதவி, வீடு, நிலம், வண்டி, வாகனம், பொன், பொருள் முதலியவைகளால் மேன்மையடைய முடியாது என இக்குறள் வெளிப்படையாகவே கூறிக் கொண்டிருக்கிறது. இதனால், பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்பதும் பெறப்படும்.
முதலில் ஒழுக்கத்தைப் பெற்று, அதன் மூலம் உயர் வடைந்துவிட்ட ஒருவர், பின்பு அறியாது ஒரு தவறு செய்துவிட்டாலும், அல்லது அவர் தவறு செய்துவிட்டதாக ஒருவர் முன்வந்து கூறினாலும் உலகம் நம்பாது. ஆதலின் ஒழுக்கத்தைப் பெற்றவர் எப்பொழுதும் அடைவது மேன்மையே என இக்குறள் கூறிக்கொண்டிருக்கிறது; இதனை ‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை’ என்பதால் நன்கறிலாம்.
மக்கட் பண்பு ஒழுக்கத்கை அடைவதே. அதனையடையாதவர் மக்களல்லர். “அவர் மரம்” என்பது வள்ளுவர் கருத்து. இதனை “மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்” என்ற மற்றொரு குறளாற் காட்டுகிறார். இவ் உவமையும் மக்களில் தாழ்ந்தோரைக் குறிப்பிடுவதில்லை. ஏனெனில், மரம் இருந்தும் உதவுகிறது; இறந்தும் உதவுகிறது.
இக்குறளின் மேற்பகுதிக்கும், கீழ்ப்பகுதிக்கும் இடையில் “இழுக்கம்” என்ற சொல் காணப்படுகிறது. “ஒழுக்கம்” என்பதன் நேர்மாறானதே “இழுக்கம்” என்றாகும். ஒழுக்கம் என்பது நல்லொழுக்கத்தை மட்டுங் குறிப்பதுபோல, இழுக்கம் என்பது தீயொழுக்கத்தை மட்டுமே குறிக்கும்.
“இழுக்கு” என்ற சொல் திக்குறளில் 18 இடங்களில் காணப்படுகிறது. அவற்றுள் தவறு என்ற பொருளில் வந்தவை 6, (136, 137, 35, 48, 384, 536.); குற்றம் என்ற பொருளில் வந்தவை 5, (127, 164, 467, 716, 893.); வழுக்கல் என்ற பொருளில் வந்தவை 3, (384, 415, 963.); பிழை என்ற பொருளில் வந்தவை 2, (138, 808); இன்னாமை என்ற பொருளில் வந்தது 1, (911); மறுப்பு என்ற பொருளில் வந்தது 1, (535). இக்குறளில் இது “முதல் வரிசையிலுள்ள தவறு” என்ற பொருளில் வந்துள்ளது.
“இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என்ற இக் குறளின் கீழ்ப்பகுதி, ஒழுக்கத்தில் தவறிய மக்கள் பழியை அடைய நேரிடும் என எச்சரித்துக் கொண்டிருக்கிறது.
பழியிலும் கடும்பழி, கொடும்பழி, பெரும்பழி எனப் பலவகையுண்டு. இக்குறள் அவைகளுக்கு மேலாக “எய்தாப்பழி” என ஒரு புதுப்பழியையுங் காட்டுகிறது.
ஒழுக்கம் தவறிய ஒருவனை சுட்டிக்காட்டி, “இவரிடம் நான் நேற்றிரவு நூறு ரூபாய்களைக் கொடுத்து வைத்துத் திண்ணையிற் படுத்திருந்தேன்; காலையில் கேட்டால் தர மறுக்கிறார்” என ஒருவன் பொய்யாகக் கூறினாலும், உலகம் எளிதாக நம்பிவிடுமாம். பணத்தை அவனிடம் கொடுத்துவிடும்படி ஊரார் வற்புறுத்துவார்களாம். அவன் எவ்வளவுதான் உண்மையைச் சொன்னாலும் ஊரார் நம்பவே மாட்டார்களாம். ஆகவே, அவன் ஏற்காத பழியையும் ஏற்க நேரிட்டுவிடுமாம். இக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அம்புகளாக்கி, ”எய்தாப் பழி" என்பது நம் உள்ளத்தில் எய்துகொண்டேயிருக்கிறது.
சாலை அமைத்தல், சத்திரங்கள் கட்டுதல், சோறு வழங்குதல், கோயிலைப் புதுப்பித்தல், பள்ளியைத் தொடங்குதல் முதலியவை நல்லோர் செய்யும் நற்பணிகள். இவை அனைத்தும் புகழுக்குரியவை. எனினும். ஒழுக்கத்தை இழந்துவிட்ட ஒருவன் இவற்றிலொன்றைக் செய்வானானால், அதற்குரிய புகழையும் அவனால் அடையமுடியாது. “செய்த இழிசெயல்களை மறைப்பதற்காகவே அவன் இதைச் செய்கிறான்” என மேலும் அவன் பழிக்கப்படுவான். பாவம்! அவன் அடைய வேண்டாத பழி இது. என் செய்வது? “எய்தாப்பழி” என்பது, நமக்கு இதை மட்டுமா அறிவிக்கிறது? இன்னும் என்னென்னவோ?
மேற்பாதியை மேன் மக்களுக்கும், கீழ்ப்பாதியை கீழ் மக்களுக்கும் அமைப்பதை வள்ளுவர் ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. இவ் உண்மை பல்வேறு குறள்களால் நன்கறியலாம். அது மட்டுமல்ல; இந்த அதிகாரத்திலேயே வந்துள்ள “வழுக்கியும் வாயால் சொலல் தீது”, “ஒழுக்கமினான்கண் உயர் வில்லை”, “பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்”, “இழிந்த பிறப்பாய் விடும்”, “என்றும் இடும்பை தரும்” என்ற கீழ்ப்பாதி குறள்களும் இதனை மெய்ப்பிக்கும்.
“எய்தாப்பழி” ஆம், இக்குறளின் இறுதிச் சீர்! இறுதி எச்சரிக்கை! எண்ணாப்பழி, செய்யாப்பழி, பொல்லாப்பழி எனவும் கூறலாம். ஒழுக்கம் தவறி நடக்கும் மக்களுக்கு இதை ஒரு "அபாய அறிவிப்பு” என்றே கூறியாக வேண்டும்.
தம்பி! ஒழுக்கமாக நட! அதனால் பயனுண்டு, புகழுமுண்டு! ஒருக்கால் நீ அறியாது தவறினாலும், உலகம் நம்பாது. ஆதலின் அன்றும் உனக்கு உயர்வுண்டு! ஆகவே முயற்சிசெய்து அதனை அடை! முடியாவிடில் சும்மாவாவது இருந்துவிடு! தவறியும் இழுக்கத்தில் இறங்கி விடாதே! அதனால் நீ பழியையே அடைவாய். பின் நல்லது செய்யினும் பயனுமிராது, புகழும் வராது, பழியும் நீங்காது.
அந்த அளவில் நின்றுவிட நீ விரும்பினாலும், உலகம் உன்னை ஒருபோதும் விட்டுவிடாது. இறுதியில் ஏற்காத பழியையும் நீ ஏற்கவேண்டி வந்துவிடும்! என எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது இக்குறள், குறள் வேண்டுமா? படியுங்கள் மறுபடியும்.
"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி."
படித்தீர்களா? மறந்து விடாதீர்கள்! ஏனெனில் குறள் படிப்பதற்கோ, மறப்பதற்கோ தோன்றியதல்ல; அது நடப்பதற்காகவே தோன்றிய ஒன்று!
வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் தமிழ்ப் பண்பு!
10. நோய் செய்தார் மேல!
"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது இன்னா செய்யாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று.
வெகுளாமையைப் பற்றிக் கூறிய பின்னும், கொல்லாமையை பற்றிக் கூறுவதன் முன்னும், "இன்னாசெய்யாமை” என்பதுபற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும்.
“நோய் எல்லாம் நோய் செய்தவர் மேல் ஆகும்; ஆதலின் நோயின்மை வேண்டுபவர் பிறர்க்கு நோய் செய்யார்” என்பது இதன் பொருள்.
திறக்குறள்களுக்கு உள்ள தனிச்சிறப்புகள் பல அவற்றுள் ஒன்று “மேற்போக்காகப் படிப்போர் அறிய முடியாத பல உயர்ந்த கருத்துக்களைச் சிந்திப்போருக்கு அது வழங்கிக்கொண்டிருக்கிறது” என்பதே!
இக் குறளில் ஆழ்ந்துள்ள பொருள்களைக் காணுமுன்னே, “நோய்” என்ற சொல்லுக்குப் பொருள் கண்டாக வேண்டும்.
திருக்குறளில் “நோய்” என்ற சொல் 34 இடங்களில் காணப்படுகிறது. ஆறு வகையான பொருள்களில் வள்ளுவர் இதனைக் கையாண்டிருக்கிறார்.
“துன்பம்” என்ற பொருளில் வந்த குறள்கள் 14; அவை 261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1229, 1241, 1243, 1266, 1303.
‘உடற்பிணி’ என்ற பொருளில் வந்த குறள்கள் 5; அவை 853, 941, 946, 947, 948.
“காமப்பிணி” என்ற பொருளில் வந்த குறள்கள் 11; அவை 1091, 1147, 1159, 1171, 1175, 1176, 1183, 1246 1255, 1280, 1301.
“குற்றம்” என்ற பொருளில் வந்த குறள் 1; அது 821. “வினைப்பயன்” என்ற பொருளில் வந்த குறள் 1: அது 360. “இன்னா” என்ற பொருளில் வந்த குறள் 1; அது இது.
“இன்னா” என்பது “இனிய” என்பதன் எதிர்மறை. “இன்னாதன” என்பது “இனியதல்லாதவை” என்று பொருள்பெறும். இது நல்லறிஞர்களாலே எண்ணத்தகாததும், சொல்லத்தகாததும், செய்யத் தகாததுமாம்.
பெருஞ்சிறப்பைத் தருகிற அருஞ்செல்வங் கிடைப்பதாயினும் பெரியோர் பிறர்க்கு இன்னா செய்யார். பெருஞ் சீற்றத்துடன் ஒருவன் தனக்கு இன்னா செய்த விடத்தும் அறிஞர் அவர்க்கு இன்னா செய்ததில்லை. தான் ஒரு குற்றமும் செய்யாதிருக்க, தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னா செய்யாமை இயல் புடையவரது செயல். இன்னா செய்தார்க்கு விதிக்கப் படும் கொடுந் தண்டனை அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்து விடுவது, பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதாதவனுடைய அறிவு பயனற்ற அறிவு. இன்னாது என அறிந்தும் அதை ஒருவன் பிறர்க்குச் செய்வது பெருந்தவறாகும். எப்போதும் யாருக்கும் எந்த அளவிலும் இன்னா செய்யாமையே தலையாய அறம். பிறர் தனக்குச் செய்த இன்னாதனவற்றின் துன்பத்தை அனுபவிக்கும் ஒருவன் அதையே பிறனுக்குச் செய்ய விரும்புவது ஏன்? இன்னாதவற்றை ஒருவன் பிறனுக்கு முன்செய்தால் அது அவனுக்கு பின்னே வந்து சேரும் என்ற கருத்துக்களை ஒன்பது குறள்களாற் கூறிய வள்ளுவர், இறுதிக்குறளாகிய இக்குறளில் “ஒருவன் செய்த நோய் அவனையே வருத்து மாதவின், நோயில்லாமல் வாழ விரும்புகிறவர்கள், பிறருக்கு நோய் செய்யமாட்டார்கள்” என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
“நிலத்தில் அறைந்தவன் கை வலியெடுக்கத் தப்பாதது போலப் பிறருக்குத் துன்பஞ்செய்தவன் அத்துன்பத்திலிருந்து தப்ப முடியாது” என முன்னொரு குறளிற் கூறியிருந்தார். அக்குறளிலிருந்து அறையப்பெற்ற நிலத்திற்கு சிறிது அதிர்ச்சியும், அறைந்தவனது கைக்குப் பெருவலியும் உண்டாகும் என அறிந்தோம் என்றாலும் அதனதன் பங்கு எவ்வளவு இருக்கும்?" என்று ஐயுறுவாரை நோக்கியே, இக்குறள் கூறப்பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது.
ஒருவன் பிறருக்கு இன்னா செய்தால், செய்தவனுக்கு 99 பங்கு துன்பமும், செய்யப் பெற்றவனுக்கு ஒரு பங்கு துன்பமும் கூட இல்லை. 100 பங்கு துன்பமும் செய்தவனுக்கேயாம் என்று இக்குறள் கூறுகிறது. இவ்வுண்மையை இக்குறளிலுள்ள “நோய் எல்லாம்” என்ற இரு சொற்களிற் கண்டு மகிழுங்கள்.
“ஒருவனுக்குத் தான் செய்த கொடுமை உடனே தனக்கு வராவிடினும், பின்பொருகால் உறுதியாக வந்து சேரும்” என்ற கருத்தையும், இக்குறளிலுள்ள “ஆம்” என்ற சொல் காட்டிக்கொண்டிருக்கிறது.
“துன்பமானது ஒருவனுக்கு வெளியிலிருந்து பிறர் செய்து வருவதுமட்டுமல்ல; ஒருவன், தானே தன் செயலாலேயே அதைத் தேடிக்கொள்ளவும் வரும்” என்பதை இக்குறள் கூறாமற் கூறுகிறது.
“வைகிறவன் வையப்படுவான்; அறைகிறவன் அறையப்படுவான்” என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை. வாழ்த்துகிறவன் வாழ்த்துப் பெறுவான், அன்பு செலுத்துகிறவன் அன்பைப் பெறுவான்“ என்பதும். இவ்வுண்மையை இக்குறளில் வள்ளுவர் ”நோயின்மை வேண்டுபவர் நோய் செய்யார்" என்ற சொற்றொடரால் விளக்குவது எண்ணி எண்ணி மகிழக்கூடியதாகும்.
அண்மையில் நான் சிறையில் இருந்தபொழுது தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற ஒரு கொலையாளியைச் சந்திக்க நேர்ந்தது. அவன் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பதைக் க ண் டு வியப்படைந்து காரணம் வினவினேன்.
"என் தந்தைக்குத் தானே தேடிய சொத்து சிறிது இருந்தது. அவர் அதை எனக்கும், என் பிள்ளைகளுக்கும் கொடுக்காமல் பிறருக்கு உயில் எழுதிவைக்க முயன்றார். நான் எவ்வளவோ கூறியும் கேளாததால் கொன்றுவிட்டேன். உயிலும் எழுதவில்லை. என் தந்தையும் இறந்துவிட்டார். நானும் இறக்கப்போகிறேன். சொத்து என் பிள்ளைகளைச் சேர்ந்துவிடும். என் எண்ணம் நிறைவேறி விட்டது. நான் எதற்காகக் கவலைப்பட வேண்டும். சாவை மகிழ்வோடு வரவேற்கின்றேன். இன்னும் சில நாட்கள் சென்று தூக்கிலிடுவதைவிட இன்றே தூக்கிவிட்டால் இன்னும் மகிழ்வோடு சாவேன்' என நெஞ்சு நிமிர்ந்து கூறினான்.
நான் பெரிதும் வியப்படைந்ததோடு, “நோய் எல்லாம் நோய் செய்தார் மேல்” என்ற குறளும் பொய்த்து விட்டதே? என்ற ஐயமும் கொண்டு, “சாவை விரும்புவதிலும் விரைவாக விரும்புவது ஏன்!” என்று வினவினேன்.
“என் தந்தையைச் சுவரில் சாய்த்துவைத்துக் கழுத்தில் கையை வைத்து நெறித்தேன். அப்போது அவரது விழிகள் பிதுங்கின. ”அட பாவிப் பயலே, இதற்காகவா உன்னை வளர்த்தேன்?“ என்பது அவர் வாயிலிருந்து வந்த கடைசிச் சொற்கள், விழி பிதுங்கிய அவரது முகத்தோற்றம், ஒவ்வொரு வினாடியும் என் கண்முன்னே தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அவரது கடைசிச் சொற்கள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. உண்ண, உறங்க, படிக்க, படுக்க, இருக்க என்னால் முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் கொலைத் துன்பத்திலும் கொடிய துன்பத்தை அனுபவித்துக் கொண்டேயிருக்கிறேன். நான் இறப்பதன்மூலம் இத் துன்பம் ஒழிந்துவிடும். ஆதலின் சாவை இன்றே, இப்போதே மகிழ்வோடு வரவேற்கிறேன்” என்றான்.
எப்படி “நோய் எல்லாம் நோய் செய்தார் மேல வாம்” என்ற குறளின் பொருள்? இதனால் “நாம் பிறர்க்குச் செய்யும் துன்பம் அனைத்தும் பின் நம்மையே வந்து வருத்தும்” என்பது நன்கு விளங்குகிறது. இவ் உண்மையை நாம் இப்பொழுதுதான் காண்கிறோம். இதனை வள்ளுவர் கண்டு இரண்டாயிரம் ஆண்டுகளாயின. என்னே அவரது அறிவின் பெருமை! படியுங்கள் குறளை மறுபடியும்.
"நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்."
எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! சிந்தியுங்கள் ஆழ்ந்து! காணுங்கள் உண்மையை! அந்த அளவோடு நின்று விடாதீர்கள். செயலிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்!
வாழட்டும் திருக்குறள்!
வளரட்டும் குறள்நெறி!